இலங்கைத் தமிழ் சைவர்கள் சிதம்பரம் ஆனித்திருமஞ்சன தரிசனத்துக்கு வர தமிழக அரசு வசதி செய்யவேண்டும்!

சிதம்பரம் வருகை தருகின்ற இலங்கை இந்து சைவர்களை இந்து தமிழர் கட்சியின் சார்பிலும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தங்கள் கவனத்திற்கு எடுத்துச் சொல்கிறோம்.

complaint ravikumar

கச்சத்தீவுக்குச் சென்று கிறிஸ்தவர்கள் அந்தோணியார் திருவிழாவிற்கு வழிபாடு செல்வதற்கு உரிய வசதி செய்து தருவது போல, இலங்கையில் இருக்கக் கூடிய இந்து சைவர்கள் சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசிக்க ஆனித் திருமஞ்சன பெருவிழாவுக்கு வருவதற்குத் தேவையான கப்பல் போக்குவரத்தை தொடங்கிட மத்திய அரசிடம் வலியுறுத்திட வேண்டியும், வரக்கூடிய இலங்கை இந்து சைவர்களுக்கு தமிழக அரசு முழு வரவேற்பும் வசதியும் செய்து தர வேண்டியும் இந்து தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ராம.ரவிக்குமார் தலைமையில் அக்கட்சியினர், சென்னை கோட்டையில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…

இலங்கையிலுள்ள இந்து சைவர்களுக்கு தமிழகத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் சம்பந்தம் என்பது ரத்த உறவை போல ஆகும்.

இலங்கை வாழ் இந்து சைவர்களுடைய மடங்கள் சிதம்பரம் நகரில் முப்பதுக்கும் மேற்பட்டவை இருக்கிறது. சிதம்பரத்திற்கும் இலங்கைக்குமான தொடர்பு பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒரு தமிழ் உறவு முறை. காலச்சூழலில் கப்பல் பயணத்தில் தமிழகம் வந்து கொண்டிருந்த இலங்கை இந்து சைவர்கள் தற்போது சிதம்பரம் ஆனித்திருமஞ்சன பெருவிழாவிற்கு விமானத்தில் வரக்கூடிய சூழல்தான் இருக்கிறது. இதற்கு பெரிய பொருட் செலவும் ஏற்படுகிறது.

பணக்காரர்கள் மட்டுமே வந்து சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வேண்டிய நிலை இருக்கிறது. கடந்த ஆண்டு இலங்கை வட மாகாண ஆளுநர் திரு ரெஜினால்டு கூரே, மற்றும் இலங்கை சிவசேனை தலைவர் பெரும் கல்வியாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களுடைய முயற்சியாலும் காங்கேசன் துறையில் இருந்து தமிழகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அனுமதியும் கிடைத்திருந்த நிலையில் இந்திய தேர்தல் சூழலால் கடந்த ஆண்டு இலங்கை வாழ் இந்து சைவர்கள் சிதம்பரம் நடராஜ பெருமானை கப்பல் போக்குவரத்தில் வழியாக வந்து தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கப்பெறாமல் ஆகிவிட்டது.

ஆனால் இந்த ஆண்டு இலங்கை இந்து சைவர்கள் கப்பல் போக்குவரத்து வழியாக குறைந்த கட்டணத்தில் அதிகமான இந்து சைவர்கள் சிதம்பரம் நடராஜ பெருமானை தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம்.

கச்சத்தீவில் அந்தோணியார் திருவிழாவிற்கு தமிழகத்திலிருந்து செல்லக்கூடிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கக்கூடிய சலுகையை போல இலங்கையில் இருந்து வரக்கூடிய இந்து சைவர்களுக்கு தமிழக அரசும் பாரத அரசும் உரிய வழிவகை செய்ய இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்திற்கு கப்பல் போக்குவரத்து வழியாக சிதம்பரம் வருகை தர தயாராக இருக்கின்ற இலங்கை இந்து சைவர்களை தமிழக அரசும், பாரத அரசும் அவர்கள் தங்குவதற்கு மற்றும் தரிசனத்திற்கு தேவையான வசதிகளை; வரவேற்ப்பை தந்திட வேண்டும். என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோள் முன்வைத்து இந்த கோரிக்கை மனுவை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் சமர்ப்பிக்கிறோம்.

சிதம்பரம் வருகை தருகின்ற இலங்கை இந்து சைவர்களை இந்து தமிழர் கட்சியின் சார்பிலும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தங்கள் கவனத்திற்கு எடுத்துச் சொல்கிறோம்.

எல்லாம் வல்ல நடராஜப் பெருமானுடைய அருளால் இந்த ஆண்டு கப்பல் போக்குவரத்து தொடங்கிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்… என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.