― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதுணுக்குகள்thiruசர்வதேச அமைதி காப்போர் தினம்

thiruசர்வதேச அமைதி காப்போர் தினம்

- Advertisement -
international day of peacekeepers

சிறப்பு தினங்கள்

சில தினங்கள் சிறப்பு தினங்களாக சர்வதேச அளவிலும், தேச அளவிலும் அனுசரிக்கப்படுகிறது. நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி இந்த சிறப்பு தினங்கள் நம் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன. அன்றைய தினம், சமூகம் அக்கறை செலுத்த வேண்டிய விஷயத்தைப் பற்றிய வரலாறு, உலக நாடுகளின் பங்களிப்பு, மக்களின் குறிப்பாக இளைஞர்களின் மனதில் இத்தகவல்களை ஆழமாக பதிய வைத்தல், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முனைப்பாடுகள் பற்றி சிந்திக்க வைக்கின்றன.

சர்வதேச அமைதி காப்போர் தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் கீழ் ”ஐக்கிய நாடுகள்  அமைதிப்படை” (யு.என்.பீஸ் கீப்பிங் ஃபோர்ஸ்) இயங்குகிறது.

உலகில், இரு நாடுகளுக்கிடையில் அமைதியின்றி இருக்கும் போது, போர் முஸ்தீப்புகள், போர், போரினால் ஏற்படும் சேதங்கள், உயிரிழப்பு மற்றும் பனிப்போர் சமயங்களில், சர்வதேச அமைதிப் படை, அமைதியை நிலை நாட்ட, இயல்பு நிலையைக் கொண்டு வர மிகவும் உதவுகிறது.

சர்வதேச அமைதிப்படையில் பல்வேறு நாடுகளின் வீரர்களும், தளவாடங்களும், படைகளும் ஒன்றிணைந்து செயல்படுவர்.

உலகின் எந்தப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமோ, அங்கே அமைதிப்படை அனுப்பி வைக்கப்ப்படும்.

அந்நாடுகளின் ராணுவ மற்றும் உள்ளுர் காவலர்களோடு மக்கள் இயல்பு வாழ்க்கை வாழத் தேவையான காரணிகளை உருவாக்கும் சர்வதேச அமைதிப்படை !

இதனை ”அமைதி காக்கும் நடவடிக்கைகள்” ( Peacekeeping Operations )  என்று சொல்லுவர். இத்தகைய முயற்சிகளில், உயிரிழக்கும் சர்வதேச படை வீரர்களும் உண்டு !

அமைதி முயற்சிகளையும், அம்முயற்சியில் உயிர்நீத்தோரையும் நினைவுகூறும் வகையில் மே 29ம் நாள் , சர்வதேச அமைதி காப்போர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ….

இரண்டாம் உலகப் போர் பற்றிய செய்திகள் இன்று வரை அச்சத்தையும் திகைப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது. அப்போது ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள், பொருளாதார, வாழ்வாதார தாக்கங்கள், தனிமனிதர்களின் இன்னல்கள்… சொல்லவொண்ணாத் துயரமான வரலாறாகவே இருக்கிறது.

உலக சமாதானத்தையும் அமைதியையும் நிலைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபை உருவானது.

போர் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போது, அமைதியை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைத்து விநியோகிக்கவும் உலக அமைதி காக்கும் படை மற்றும் கண்கணிப்பாளர்களை ஐ.நா.சபை அனுப்பத் துவங்கியது.

அமைதிப்படை நடவடிக்கைகள்

1948 ஆம் ஆண்டு மே 29ம் நாள் , தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் சபை ( UNTSO – UN Truce Supervision Organisation ) மத்தியக் கிழக்கில் , அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்குமான போர் நிறுத்தத்தைக் கண்காணிக்ககும் நடவடிக்கையை எடுத்தது.

அப்போதிலிருந்து,கிட்டதட்ட எழுபது நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. மூவாயிரத்துக்கும் அதிகமான அமைதிப்படை வீரர்கள் அமைதி நடவடிக்கை மணிகளில் உயிரிழந்து இருக்கிறார்கள். இது வரை, 120 நாடுகளைச் சேர்ந்த ஒரு மில்லியன் ஆண்களும், பெண்களும் அமைதி நடவடிக்கைகளில் பங்கேற்று உள்ளனர் என ஐ.நா.சபை குறிப்பு தெரிவிக்கிறது.

அமைதி காக்கும் குழுவில் படைவீரர்கள் இருந்தாலும்,
நிர்வாகத் திறன் பெற்றவர்கள்
பொருளாதார நிபுணர்கள்
வழக்குரைஞர்கள்
தேர்தல் கண்காணிப்பாளர்கள்
மனித உரிமை பொறுப்பாளர்கள்
சமூக சேவகர்கள்
தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் …
என ஒரு பெரிய குழுவே இருக்கும் !

இத்தகைய அமைதி காப்போர் குழு, அமைதி, நல்லிணக்கம், புரிதலுணர்வு, இயல்பு வாழ்க்கை முதலியவற்றை ஏற்படுத்த உதவி செய்யும் .

அமைதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் சிறப்பிக்கும் வகையிலும், உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையிலும், முதன் முதலில் அமைதி நடவடிக்கை ,மேற்கொண்ட நாளான மே 29 ம் நாளை,  சர்வதேச அமைதி காப்போர் தினமாக அனுசரிக்க, ஐ.நா சபை, 2001 ஆம் ஆண்டு முடிவு செய்தது.

கருப்பொருள்

ஒவ்வொரு ஆண்டும், ஒரு கருப்பொருளை முன்னிலைப்படுத்தி, ஆய்வுகளும், கருத்தரங்குகளும், முன்னேற்றத்துக்கான உத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

2020 ஆம் ஆண்டில், ”உலக அமைதி காக்கும் பணியில் பெண்களின் பங்கு” என்பது கருப்பொருளாக இருந்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில், அமைதி காக்கும் பணியில் 4.7 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

2021 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக  “நீடித்த அமைதிக்கான பாதை : உலக அமைதி மற்றும் பாதுகாப்பில் இளைஞர் சக்தி” ( The Road to a Lasting Peace : Leveraging the Power of Youth for Peace and Security ) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுக் காலத்தில் அமைதி காப்போர் குழுவும் பெரும் சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.

2016 ஆம் ஆண்டில் இருந்து,ஒவ்வொரு வருடமும் ஒரு அமைதி காப்போருக்கு  “ஜெண்டர் அட்வகேட் விருது “ கொடுக்கப்படுகிறது. ஆண், பெண் சம உணர்வு காத்தல், பெண்களுக்கான வாய்ப்புகளைப் பெருக்குதல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற செயல்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மே 29 ம் நாள் , இந்த விருதினைப் பெற்றவர் ஒரு இந்தியர்.

2019 ஆம் ஆண்டுக்கான ”ஜெண்டர் அட்வகேட் விருது” மேஜர் சுமன் கவானி என்ற இந்தியப் பெண்மணிக்கு , இணைய வழி விழாவில் வழங்கப்பட்டது.

நீல நிறத் தொப்பி / தலைக்கவசம்( ஹெல்மெட் )

ஐ.நா அமைதிப் படையின் தனிச்சிறப்பு, ஐ.நா என்ற எழுத்துகளுடன்  கூடிய நீல நிறத் தொப்பி அல்லது தலைக்கவசம் ஆகும்.
அமைதி சிறக்கட்டும் ! நீலத் தொப்பிகளின் பணி சிறக்கட்டும்!

  • கட்டுரை: கமலா முரளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version