ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் மலர் கண்காட்சியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பல்வேறு அலங்காரங்களை கண்டு ரசித்தனர்.
ஊட்டி கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கிய பல வண்ண, வண்ண மலர்களை சுற்றுலா பயணிகளின் கண்களை குளிர்வித்தது. சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்கள் முன்பும், மலர்களின் முன்பு நின்றும் செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.தாவரவியல் பூங்காவில், இன்கா மேரிகோல்டு, பெட்டூனியா உள்ளிட்ட பல்வேறு வகைகளை கொண்ட, 5.5 லட்சம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 40 ஆயிரம் தொட்டிகள், மலர் காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் கட்டடத்தின் மாதிரி முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்து கார்னேஷன் மலர்கள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது
கண்காட்சி தொடங்கிய முதல் நாளிலேயே 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூங்காவில் குவிந்து கண்காட்சியை கண்டு ரசித்தனர். நேற்று 18 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். 2 நாட்களில் மட்டும் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.
3வது நாளாக இன்று ஞாயிறு பொதுவிடுமுறை என்பதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூங்காவில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் தலையாகவே தென்பட்டது. மே மாதம் முழுவதும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


