குற்றாலத்தில் உச்சகட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில் குற்றாலம் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதையடுத்து நாளை முதல் படகு சவாரி துவங்குகிறது.
குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுது போக்கும் முக்கிய அம்சமாக படகு சவாரி திகழ்கிறது. குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் வெண்ணமடை குளத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதமே சீசன் துவங்கிய நிலையில் படகு குழாமில் ஓரளவு தண்ணீர் நிரம்பியது. ஆனால் எதிர்பாராத விதமாக ஜூன் மாதம் குறிப்பிடத்தக்க அளவில் மழை இல்லாததால் குளம் நிரம்பவில்லை. இதனால் படகு சவாரி துவங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. ஐந்தருவியில் கொட்டும் தண்ணீரால் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதையடுத்து சுற்றுலாத்துறையினர் படகு சவாரியை நாளை முதல் துவக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
படகுகள் பராமரிக்கப்பட்டு உயிர்காக்கும் ஜாக்கெட் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தற்போது 2 இருக்கை மிதி படகுகள் 7ம், 4 இருக்கை மிதி படகுகள் 17ம், 4 இருக்கை துடுப்பு படகுகள் 5ம், தனிநபர் சவாரி செய்யும் வகையில் ஹயாக் வகை படகுகள் 4ம் என 33 படகுகள் தயாராக உள்ளன.