காணும் பொங்கலில் ஊட்டி கொடைக்கானலில் எங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம்- ஊட்டி கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.
தொடர் விடுமுறையின் காரணமாக கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. காணும் பொங்கல் தினமான இன்று அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மோயர்சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரிப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலை பகுதிகளில் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் பற்றாக்குறையால் உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்களே ஏரிச்சாலை பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்து போக்குவரத்து நெரிசலை குறைத்தனர்.
கொடைக்கானல் பொதுமக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையான போக்குவரத்துக் காவலர்களை அதிக அளவில் நியமிப்பது என்ற கோரிக்கை எட்டாக்கனியாகவே உள்ளது. மேலும் தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிக அளவில் போக்குவரத்துக் காவலர்களை அனுப்பி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பேரிஜம், மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, குணா குகை போன்ற சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் டிக்கெட் கட்டணம் நீண்ட காலமாக அந்தந்த பகுதிகளில் வசூல் செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக அனைத்து வனத்துறை சுற்றுலா தளங்களுக்கும் செல்ல ஒரே கட்டணம் ஒரே நுழைவுச்சீட்டு என பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, கேமராவுக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோசன் ரோடு வனத்துறை சோதனை சாவடியில் இந்த கட்டணம் வாங்கப்படுகிறது. இதன் காரணமாக மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சிக்கி திணறியது. ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான சுற்றுலா இடங்களை காண முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டது.
எனவே இந்த நடைமுறையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் நகர முடிந்தது. அதிகமான கடைகளும் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது. எனவே வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். அவசரத்துக்கு விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை கூட ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இங்கு போக்குவரத்து காவலர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.
ஊட்டி மிகவும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.லேக், பொட்டானிக்கல் கார்டன் தொட்டபெட்டா உட்பட பல்வேறு இடங்களில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழரின் பண்பாடு, கலாசாரத்தை கடைபிடிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கலைப்பண்பாட்டு துறை சார்பில் 2 நாட்களுக்கு சென்னை தீவுத்திடலில் நாட்டுப்புற கலைஞர்களுக்காக கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்பட்டது. மேலும் பரதநாட்டியம், சிலம்பாட்டம், பறை சாற்றுதல், குச்சி பிடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட அனைத்து கலைகளையும், நாட்டுப்புறக் கலைஞர்களையும் வளர்க்கும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற கலைகளை வளர்ப்பதன் மூலம் தமிழ்மொழி வளரும். அனைத்து துறைகளையும் சிறந்த துறைகளாக கொண்டுவர முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவில் தமிழக சுற்றுலாத்துறை முதலிடத்தில் உள்ளது. கொரோனா காலத்தில் 2019-20-ம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. தமிழகத்துக்கு கடந்த 2021-ம் ஆண்டில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 11 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இது மிகப்பெரிய வளர்ச்சி. சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் வசதி, போக்குவரத்து வசதி, சூழல் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மருத்துவ சுற்றுலா என பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.