கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் குளிர் நிலவுவதால் அதனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில் தொடர் உறைபனியால் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன.
மூணாறில் ஜன.9 முதல் இன்று வரை காலையில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனஸ் ஒன்று முதல் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. குறிப்பாக கன்னிமலை, தேவிகுளம், லாக்காடு, செண்டுவாரை, நல்லதண்ணி உள்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும் பாம்பாடும் சோலை தேசிய பூங்காவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஒரு வாரமாக வெப்ப நிலை வெகுவாக குறைந்து உறைபனி ஏற்பட்டது. அதனால் கடும் குளிர் நிலவியதால் காலையில் பொது மக்களின் அன்றாட பணிகள் முடங்கிய நிலையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அதேசமயம் அதிகரித்த குளிரை அனுபவிக்க உறைபனி ஏற்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் படை எடுத்தனர். குறிப்பாக மூணாறு அருகில் உள்ள கன்னிமலை எஸ்டேட் பகுதியில் 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் பெரும் அளவில் குவிந்தனர். தற்போது உறைபனி இல்லை என்ற போதும் குளிரை குழந்தைகளுடன் அனுபவித்தனர்.
ஒருவாரமாக நிலவிய உறைபனியால் தேயிலைச் செடிகள் கருகி வருகின்றன. இரு தனியார் கம்பெனிகளுக்குச் சொந்தமான எஸ்டேட்டுகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகின.லாக்காடு எஸ்டேட்டில் நேற்று வரை 62 ஏக்கர் தேயிலைச் செடிகள் கருகின. அதனால் பச்சை தேயிலை பறிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மூணாறு பகுதியில் கடந்த சிலநாட்களில் காலை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்டது.இந்த குளிர்காலத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக இது பதிவாகியிருக்கிறது.
மூணாறு பகுதியில் குண்டுமலா மற்றும் தேவிகுளம் லக்கட் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை பூஜ்ஜியத்தைத் தொட்ட நிலையில், மலைமுகடுகளை வெண்பனி மூடியிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.அதேவேளையில், மூணாறுக்கு அருகே வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவாகவும், செந்துவரை உள்ளிட்ட இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.