மஹாராஜாவாக வாழுங்கள்

 

 
ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கு முன்பு சக்கரவர்த்திகளும் மஹாராஜாக்களும்தான் நம்மை ஆண்டார்கள். எதிரிகள், சூழ்ச்சி, யுத்தம் என்று பாதகமான அம்சங்கள் நிறைய இருந்தாலும்…. ராஜாக்கள் வாழ்வே தனிதான். டாம்பீகமும், படோடபமும் நிறைந்த அந்த வாழ்வை சாதாரண மனிதர்கள் உணர்ந்து கொள்ளவே முடியாது. அதை உணரச் செய்வதுதான் மஹாராஜா எக்ஸ்பிரஸின் நோக்கம். எட்டு நாட்கள் சுற்றுலாவில் உங்களை பாரம்பரியம் மிக்க ராஜாவின் வாழ்க்கையை நிஜத்தில் கொண்டு வந்து விடுகிறார்கள்.

இதுதான் மஹாராஜா எக்ஸ்பிரஸ்

2010-ல் ‘இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரே­ஷனும்’, ‘காக்ஸ் அண்ட் கிங்ஸ் இந்தியா’வும் இணைந்து மேற்கொண்டதே இந்த ‘மஹாராஜா எக்ஸ்பிரஸ்’ சுற்றுலா. இன்றைக்கு இது உலகிலேயே மிக உயர்ந்த ஆடம்பர ரயில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. ரயிலில் ‘பிரஸிடென்ஷியல் சூட்’ என்ற ஸ்டார் ஹோட்டல் சமாச்சாரங்களையெல்லாம் கொண்டு வந்தது இதில்தான்.

இந்த எக்ஸ்பிரஸில் மொத்தம் 23 கேரேஜ் இருக்கும். அதில் சுற்றுலா பயணிகளாக வரும் மஹாராஜாக்கள் தங்குவதற்கென்று 14 கேரேஜூக்கள் இருக்கின்றன. சாதாரணமாக 23 பெட்டிகள் கொண்ட ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டிக்கு 72 பேர் என்ற விகிதத்தில் 1,656 பேர் பயணிக்க முடியும். ஆனால் இந்த எக்ஸ்பிரசில் வெறும் 88 பேர் மட்டுமே பயணிக்கிறார்கள்.

இந்த 88 பேரிடம் 1656 பயணிகளின் கட்டணத்தையும் வசூலித்து விடுகிறார்கள். இப்போது புரிகிறதா இதன் பயணக்கட்டணம் ஏன் காஸ்ட்லியாக இருக்கிறது என்று. பிரஸிடென்ஷியல் சூட் டுக்காகவே தனியாக ஒரு கேரேஜ் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோக டைனிங், பார், லாஞ்ச், ஜெனரேட்டர், ஸ்டோர், தண்ணீரை சுத்திகரிக்கும் நிலையம் என்று பலவும் மற்ற கேரேஜ்களில் அமைக்கப்பட்டுள்ளன.

சிவப்பு கம்பள வரவேற்பு, பிளாட்பாரத்தில் தெரிகிறதா..!

பயணிகள் தங்கும் 14 கேரேஜிலும் 43 தனித்தனி கேபின்கள் உள்ளன. இதில்தான் 88 விருந்தினர்கள் தங்குகிறார்கள். பைவ் ஸ்டார் ஹோட்டலில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அத்தனையும் இந்த நகரும் அரண்மனையில் உள்ளது.

‘மயூர் மஹால்’

இருக்கைகள், படுக்கைகள், எல்லாமே அரண்மனை வடிவத்திலே அமைந்துள்ளன. இந்தப் பயணத்தின் மூலம் இந்திய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும். பழங்கால கோட்டைகள், அரண்மனைகள் பற்றிய விவரங்கள் வழிகாட்டிகள் மூலம் தெளிவாக அறியலாம். யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதிகளை அதிகம் கொண்ட சுற்றுலா திட்டம் இது. வனவிலங்குகளை ரசிக்க நே­னல் பார்க்குகளும் உள்ளன. உள்ளூர் கலைஞர்களின் நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியும், இந்தியர்களின் சிறப்பு அம்சமான விருந்தோம்பலும் இந்த பயணத்தின் சிறப்பு.

இவையெல்லாம் ராஜாக்கள் காலத்து பழக்க வழக்கங்களாகவே உள்ளனவே. நவீன வசதிகள் இல்லையா? என்று கேட்பவர்களுக்கு…ஏன் இல்லை? என்ற பதிலைத்தான் மஹாராஜா எக்ஸ்பிரஸ் தருகிறது. உடைமாற்ற தாராளமான இடம், ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்றபடி ஏஸியை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, 24 மணி நேர மருத்துவ வசதி, இலவச வை-ஃபை, இன்டர்நெட் இணைப்பு, எலெக்ட்ரானிக் ஸ்மோக் டிடெக்ஷ­ன் சிஸ்டம், லைவ் டெலிவிஷ­ன், சிசிடிவி கேமரா, டைரக்ட் இண்டர்நே­னல் டயல் டெலிபோன், அட்டாச்டு பாத்ரூம், அவசர உதவிக்கு ஹெலிகாப்டர், ஆம்புலன்ஸ் வசதி போன்ற எல்லாமே இதில் இருக்கிறது. மஹாராஜாவில் ஏறியது முதல் பயணம் முடிந்து இறங்கும் வரை சுற்றுலாப்பயணிகளை தலைமேல் வைத்து தாங்குகிறார்கள் இதன் பொறுப்பாளர்கள்.

ஓடும் ரயிலில் அரட்டை

இந்த எக்ஸ்பிரஸில் இரண்டு டைனிங் கேரேஜ்கள் உண்டு. ஒன்றின் பெயர் ‘ரங் மஹால்’. அதாவது வண்ணங்களின் அரண்மனை, மற்றொன்று ‘மயூர் மஹால்’. அதாவது மயில் அரண்மனை. இங்கு உணவும் ராஜ மரியாதையோடு பரிமாறப்படுகிறது. இந்த ரயிலில் சாகஸத்திற்கும், சீரிய பண்புகளுக்கும், காதலுக்கும் இடமுண்டு. தேனிலவு தம்பதிகளுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் சுற்றுலா இது.

உணவகம்

மஹாராஜா எக்ஸ்பிரஸ் 5 வகையான சுற்றுலாக்களை நடத்துகிறது. அதில் முதன்மையானது ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா! 8 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா மும்பையில் தொடங்கி அஜந்தா, உதய்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்பூர், ரத்தம்பூர், ஆக்ரா வழியாக டெல்லியில் முடிகிறது.

ஒவ்வொரு ரூமுக்குமான வரவேற்பு அறை

அஜந்தா குகை, ராஜஸ்தான் அரண்மனைகள், கோட்டைகள், தாஜ்மஹால், யானைகளின் போலோ விளையாட்டு, சைட் ஸீயிங் டூர், ஸ்பா போன்றவையும் இதில் உள்ளன. மொத்தத்தில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தையும், எட்டு நாட்கள் மஹாராஜா வாழ்க்கையையும் தரும் சுற்றுலா இது. வாழ்நாளில் ஒருமுறையாவது போய்வர வேண்டிய சுற்றுலா இது.

—————————————————————————————————————-
‘ஹெரிடேஜ் ஆப் இந்தியா’ என்ற இந்த எட்டு நாட்கள் சுற்றுலாவுக்கான கட்டணங்கள் கீழே தந்துள்ளேன்.
மொத்தம் நான்கு வகையான கட்டணங்கள் உண்டு.
—————————————————————————————————————–
டீலக்ஸ் கேபின்
 ரூ.2,00,138 (10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான கட்டணம்.
 இதுவே பெரிவவர்களுக்கு ரூ.4,60,276.

ஜூனியர் சூட்
ரூ.2,89,674 (குழந்தைகளுக்கு)
ரூ. 5,78,762. (பெரியவர்களுக்கு)

சூட்
 ரூ.4,03,788 (குழந்தைகளுக்கு)
ரூ.8,07,576 (பெரியவர்களுக்கு)

பிரசிடென்ஸியல்  சூட்
ரூ.6,96,388 (குழந்தைகளுக்கு)
ரூ.13,86,924. (பெரியவர்களுக்கு)