கோடையில் ‘ஜில்’லுன்னு சில இடங்கள்

 

 
இந்தியாவை துணைக்கண்டம் என்று கண்டறிந்து சொன்ன வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும். பாலைவனமா, அடர்ந்தகாடா, கொட்டும் நீர்வீழ்ச்சியா, மலைத்தொடர்களா, அலைக்கடலா எல்லா வகையான நிலங்களும் இந்தியாவில் உண்டு. பனி உறைந்திருக்கும் நிலப்பகுதியைப் பார்க்க நாம் வெளிநாட்டுக்குப் போக வேண்டியதில்லை. நம் நாட்டிலே அதற்கான இடங்கள் ஏராளமாய் இருக்கின்றன. அவற்றில் ஐந்து இடங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்… அங்கு சென்று வெள்ளைப் பனி மழையில் நனையலாம், வீசியெறிந்து விளையாடலாம்.

குல்மார்க் – ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 52 கி.மீ. தொலைவில் குல்மார்க் அமைந்துள்ளது. 2,690 மீட்டர் உயரம் கொண்ட இந்த இடத்தில் வருடம் முழுவதும் உலுக்கி எடுக்கும் குளிரின் ராஜ்ஜியம்தான். குளிர்காலங்களில் கேட்கவே வேண்டாம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி… பனி… பனி…. தான்!

இந்த பனி தான் இங்கு சுற்றுலா பயணிகளை குவியக்கிறது. பனிச்சறுக்கு விளையாடுபவர்களுக்கு இந்த இடம் சொர்க்கம். இங்கிருக்கும் குல்மார்க் பீடபூமியில் 40 ஹோட்டல்கள் இருக்கின்றன.

‘சி.என்.என். தொலைக்காட்சி’ குல்மார்க்கை ‘இந்தியாவின் பனி விளையாட்டுகளின் இதயம்’என்று வர்ணிக்கிறது. மேலும், ஆசியாவின் ‘பெஸ்ட் ஸ்கீ ஸ்போர்ட்ஸ்’ மைதானம் இதுதான் என்கிறது. உலகிலேயே மிக உயரமான குல்மார்க் ‘கண்டோலா’ கேபிள் காரில் பயணம் செய்வது ஆனந்தத்தின் உச்சம்.

இந்த கேபிள் கார்கள் இரண்டு ஸ்டேஜாக இயக்கப்படுகிறது. முதல் ஸ்டேஜைக் கடக்க 9 நிமிடங்கள் ஆகும் .கட்டணம் 600 ரூபாய். இரண்டாவது ஸ்டேஜைக் கடக்க 12 நிமிடங்கள் ஆகின்றன. இதற்கு கட்டணம் 800 ரூபாய்.

உயரமான கேபிள் கார் மட்டுமல்ல. உயரமான கோல்ப் விளையாட்டு மைதானமும் இங்குள்ளது. இந்த இடத்தின் அருகே ஒரு குடில் அமைத்து ‘பாபி‘ ஹிந்திப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா ஜோடியாக நடித்து அசத்திய அந்த படம் எடுத்த இடத்திற்கு இப்போதும் ‘பாபி ஹட்’ என்று தான் பெயர்.

சிம்லா- ஹிமாச்சல் பிரதேசம்
இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லாதான். நிலம், கட்டடங்களின் கூரை, மரத்தின் இலை, வாகனங்கள் என்று எந்த இடத்தையும் விட்டு விடாமல், பனிப்போர்த்தி இருக்கும் இடம் இது.

பனி துகள்களை கையில் எடுத்து ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடுவதற்கு ஏற்ற இடம். இங்கு கட்டப்பட்டுள்ள தேவாலயம்தான் வட இந்தியாவில் இரண்டாவதாக கட்டப்பட்ட தேவாலயம்.

8,000 அடி உயரத்தில் இருக்கும் ‘ஐக்கூ’ சிகரம்தான். சிம்லாவில் உயர்ந்த சிகரம். இதன்மீது நின்றபடி சிம்லா அழகைப் பார்க்கலாம்.

1974-ல் கட்டப்பட்ட மியூசியம் சிம்லாவின் கலாச்சார வளங்களை பாதுகாக்கிறது. ‘பஹாரி’எனும் ஓவியங்கள், சிற்பங்கள், மர மற்றும் வெண்கலத்தால் ஆன அணிகலன்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இங்குள்ள டவுன்ஷிப்பில் முக்கியமான ஒரு இடம் ‘சம்மர்ஹில்!’ இந்த குன்று 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. காந்தி சிம்லாவில் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் தங்குமிடம் இதுதான்.

‘நல்தேஹ்ரா’ மற்றும் ‘சைல்’ போன்ற இரு மைதானங்களும் கோல்ப் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற இடமாகும்.

பட்னிடாப் – ஜம்மு காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ‘செனாப்’ நதிக்கரையில் 2,024 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி நகரம் தான் இது. பட்னி டாப் என்றால் ‘குளங்களின் இளவரசி’ என்று அர்த்தம்.

இங்கு நாம் ‘பாராகிளைடிங்’ செல்வதன் மூலம் ஒட்டுமொத்த குளங்களின் அழகையும் கண்டுகளிக்கலாம். பட்னி டாப் சன்சார் சாலையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ‘தவாரியை’ எனும் இடம். இந்த மலைச்சரிவில் தான் பாராகிளைடிங் நடைபெறும். இங்கு துவங்கும் சாகசம் ‘குட்’ எனும் இடத்தில் தான் முடியும். காற்றின் அளவைப் பொறுத்து 15 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்குள் குட் எனும் இடத்தை அடையலாம்.

 

டிரெக்கிங்கிற்கு சிறந்த இடம் இது. பட்னிடாப்பில் இருந்து குட் வரை 270 படிகள் கொண்ட ட்ரெக்கிங் இடம் உள்ளது.

பட்னிடாப்பில் இருந்து ‘ஷித் மஹாதேவ்’ எனும் இடத்தை 5-லிருந்து 6 மணி நேரத்தில் சென்றடையலாம். இங்கு 2800 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது.

மேலும் மிகக் கடுமையான ஒரு டிரெக்கிங் என்றால் பட்னிடாப்பில் இருந்து ‘சிவகர்க்’செல்லும் பாதைதான். அனுபவம் மிக்க நடைப்பிரியர்களால் தான் இதை 6 மணி நேரத்தில் கடக்க இயலும்.

மனாலி – ஹிமாச்சல் பிரதேசம்
ஹிமாச்சல் பிரதேசத்தில் 6,276 அடி உயரத்தில் உள்ளது மனாலி.
‘ரோஹ்பாங்’ எனும் இடம் பனிச்சறுக்கு விளையாட்டிற்கு ஏற்றது. குளிர்காலங்களில் பனி மூடிய மலைச்சரிவின் இரு பக்கங்களிலும் நிறைய  கடைகள் போடப்பட்டிருக்கும். பனிச்சறுக்கிற்கான விளையாட்டு சாதனங்களும் இக்கடைகளில் வாடகைக்கு கிடைக்கும்.

ரோஹ்பாங்கிற்கு ‘மர்ஹி’ எனும் இடம் வழியாகத்தான் செல்ல வேண்டும். நம்மூர்களில் சாலையின் இரு புறங்களிலும் மரங்களைத்தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கு இரு பக்கங்களிலும் பனி மலைகள் தான். மேலும் மர்ஹியில் நீரில் விளையாடும் விளையாட்டுகளை அதிகம் மேற்கொள்ளலாம்.

 

மனாலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, ‘ராணி நலா’, இங்கு குதிரை சவாரி தான் பிரபலம். பனி மலையில் குதிரை சவாரி மேற்கொள்ள வேண்டுமென்றால் இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் முடியும்.

இங்குள்ள ‘ஷோலாங்’ என்னுமிடத்திலும் பனிச்சறுக்கு விளையாடலாம். இவ்விடம் குழந்தைகளுக்கு ஏற்றது. ஏனென்றால் இங்குள்ள பனிச்சறுக்கு ஆழம் குறைவாக இருப்பதனால் அனுபவம் இல்லாதவர்கள் கூட பனிச்சறுக்கை கற்றுக் கொள்ளலாம்.

 

பனிச்சிகரங்களையும் சில வியூ பாயிண்ட்களையும் கோதி எனும் இடத்தில் நாம் காணலாம். மனாலியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இவ்விடத்தை அடையலாம்.

முசோரி – உத்தரகாண்ட்
உத்தரகாண்டின் தலைநகரான டேராடூனில் இருந்து 35 கி.மீ. தொலைவில் முசோரி உள்ளது. முசோரி என்றால் ‘மலைகளின் இளவரசி’ என்று அர்த்தம்.

இங்கு 1993-ல் ஆரம்பிக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயம் ஒன்று உள்ளது. 339 ஹெக்டேர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. இதுவரை நாம் பனிமலையில் அமைந்திருக்கும் சரணாலயத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. மேலும் குளிர்காலத்தில் இங்கு வரும் விலங்குகளும் மிக அரிதானவை.

 

இங்கிருந்து ஒரு மணி நேர பயணத்திலேயே உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்த்தின் அடிவாரத்தை அடைந்து விடலாம். உயரமான பனி மூடிய சிகரத்தை கண்டு ரசிப்பது மறக்க முடியாத அனுபவங்களுள் ஒன்று.

டேராடூனிலிருந்து 6 கி.மீ. தொலைவில் முசோரி ஏரி உள்ளது. இங்கு எல்லாவிதமான படகு சவாரியும் உள்ளது. இங்குள்ள பனிமலைகளை பார்த்தாற்போல் படகு சவாரி செய்ய ‘பெடல் போட்டிங்’தான் ஏற்றது.

இங்கு ‘கெம்படி’ மற்றும் ‘ஜரிபானி’ எனும் இரண்டு அருவிகள் உள்ளன. ஜரிபானி அருவிக்கு செல்ல வேண்டுமென்றால், இரண்டு கி.மீட்டருக்கு முன்பாகவே காரை நிறுத்தி விட்டு பனி அடர்ந்த ரோட்டில் நடந்துதான் செல்ல வேண்டும்.

‘குன் ஹில்’ எனப்படும் மலைக்குன்று தான் இரண்டாவது உயரமான இடமாக முசோரியில் கருதப்படுகிறது.

குளிர்காலத்தில் இங்கு விஜயம் செய்து பனிப்பொழிவில் அனுபவம் பெறுவது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக என்றென்றும் தொடரும்.

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.