இது சினிமாக்காரர்கள் செயற்கையாக உருவாக்கிய ‘கனவு சீன்’ சூட்டிங் ஸ்பாட் அல்ல., மதுரை மாநகராட்சி உருவாக்கியுள்ள சூட்டிங் ஸ்பாட் .
மதுரை மாவட்டம், அவனியாபுரம் , வெள்ளக்கல் கண்மாய் மறுகால் பாயும் நீரில், வெண்மையான நுரை பொங்கி காற்றில் மிதப்பதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணம் செய்கிறார்கள். இந்த வெண் நுரை காரணமாக, நான்கு இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த வெண்மை நுரையால், மிகப் பெரும் விபத்து ஏற்படும் முன்னரே, காற்றில் பரவும் பகுதியில், தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மதுரையில் கடந்த சில நாட்களாக, மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.
இதனால், அவனியாபுரம் அயன் பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து, மறுகால் பாய்ந்து வருகிறது.
இந்த நிலையில், தொடர் மழையால், வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், இப்பகுதிகளில் இருந்து சாயப்பட்டறைக் கழிவுநீரும், மழை நீரோடு கலந்து, அயன்பாப்பாக்குடி கண்மாயில், பாசன கால்வாயில் திறந்து விடப்படுகிறது.
இந்த கழிவுநீர் எல்லாம், கண்மாயில் கலப்பதால், அயன்பாப்பாக்குடி கண்மாயிலிருந்து, மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக உள்ளது. மறுகால் பாயும் பாலத்தின் அருகே, ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதால், நீரின் வேகத்தை அவை கட்டுப்படுத்தி வருகின்றன.
இதனால், மறுகால் பாயும் இடத்தில், பஞ்சு போன்ற வெண்மை நுரை பொங்கி வருகிறது.
இது, மலை போல் பெருகி, காற்றில் பறந்து, அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, விபத்தும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, ஆகாயத் தாமரைகளை அகற்றி, தண்ணீர் செல்வதற்கு வழி செய்தால், வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், பொதுப்பணித்துறை நிர்வாகமும், மதுரை மாநகராட்சியும், தடுப்பு வேலி அமைத்து, விபத்து ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.