
தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
இராமர் கோயில், பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அழைப்பை, கொடுக்க வந்தார்கள். எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டார்கள். எனக்கு இத்தனை பெரிய பொறுப்பை அளிக்கிறார்களே, என்று நான் யோசிக்கத் தொடங்கினேன். என்னை நானே இதற்கு உகந்தவனாக ஆக்க என்ன செய்வது, தகுதியுடையவனாய் ஆவது எப்படி என்று சிந்தித்தேன். நான் சிலருடைய ஆலோசனைகளைக் கேட்டேன் சில புனிதர்களின்…… அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டேன். என்னுடைய ஆன்மீக வாழ்வோடு தொடர்புடைய சிலரிடமும் நான் வினவினேன். நான் இதை எல்லாம், ஒரு பிரதமர் என்ற வகையில எல்லாம், அணுகறதா இல்லை. ஒரு இராமபக்தன்ங்கற முறையில செய்ய விரும்பறேன். நான் என்ன செய்யட்டும்? அதில எனக்கு ஆலோசனைகள் வந்திச்சு. நிறையவே வந்திச்சு. அவற்றை நான் ஆய்வும் செஞ்சு பார்த்தேன்.
நான் பிறகு எனக்குள்ளே 11 நாள் அனுஷ்டானத்தைக் கடைப்பிடிக்கறதுன்னு தீர்மானிச்சேன். கட்டாந்தரையில உறங்கினேன். இளநீர் மட்டுமே பருகி வந்தேன். நான் தீர்மானிச்சேன், பிரபு ஸ்ரீ இராமன் எங்க எல்லாம் போனாரோ, அங்க எல்லாம் போவேன் போக நான் முயற்சி செய்வேன்னு தீர்மானிச்சேன்.
அந்த வகையில நான், அதாவது, திருவரங்கம் கோயிலுக்கு போனப்ப, தெற்கு பாரதத்தில, அங்க கம்ப ராமாயணம் படிக்க கேட்டேன். அப்ப அங்க இருந்தவங்க சொன்னாங்க…… அது 800 ஆண்டுகளுக்கு முன்பாக, கம்ப இராமாயணம் இயற்றப்பட்ட போது இந்த இடத்தில தான் அது முதன்முதலா அரங்கேற்றப்பட்டிச்சாம். அங்க எல்லார் கண்கள்லயும் கண்ணீர் இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த ஒரு….. அனுபவம் எனக்குக் கிடைத்ததே குறிப்பாக தென்னிந்தியாவில், இங்கே இருப்போருக்கு இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது.
என்ன ஒரு நம்பிக்கை என்ன ஒரு சமயப்பற்று!!! மேலும் அதில் எத்தனை புனிதத்தன்மை இருக்கிறது!! என்னுடைய நிகழ்ச்சியில் பெரிய திட்டமிடல் இல்லை அது தனிப்பட்டதாக இருந்தது. ஆனால், சாமான்ய மக்களினுடைய, ஒருவகையில் பார்த்தால், அவர்களுடைய உணர்வை என்னால் அனுபவிக்க முடிந்தது. என்னைப் பொறுத்த மட்டிலே, என்னுடைய ஆன்மீகப் பயணத்தின் ஒரு மிக மகத்துவமான காலகட்டமாக இந்த 11 நாட்களை நான் பார்க்கிறேன். நான் இராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டையை மிகத் தீவிரமாகக் கருதினேன். அதை ஒரு நிகழ்வாகவே நான் பார்க்கவில்லை. சாதாரண விஷயமல்ல அது.
கேள்வி: – அது உங்களைப் பொறுத்த மட்டிலே ஒரு ஆன்மீகக் கணம், இல்லையா?
பதில்: – 500 ஆண்டுக்காலப் போராட்டம் 140 கோடி நாட்டுமக்களின் சிரத்தை என் கண்களின் முன்பாக விரிந்தது. அவர்களின் கனவுகள், மேலும் தேசத்தின் பரம ஏழைகளும் கூட, கைக்காசு கொடுத்து ஆலயம் அமைந்திருக்கிறது அம்மா. இந்த ஆலயத்தில், 3 விஷயங்களை நான் காண்கிறேன். ஒன்று, 500 ஆண்டுக்கால, இடைவிடாத, தொடர்ந்த, ஒரே முனைப்பான போராட்டம். இலட்சக்கணக்கானோர் இதற்காகவே உயிர் இழந்திருக்கிறார்கள்.
இரண்டாவதாக, மிகநீண்ட நீதிமன்ற நடவடிக்கைகள். ஏகப்பட்ட ஆண்டுகள் நீதிமன்றச் செயல்பாடுகள். இப்படிப்பட்ட நீதிமன்றச் செயல்பாடுகளின் அனைத்துச் சோதனைகளிலும் சரிபார்க்கப்பட்டு வெளிவந்த தீர்ப்பு இது. அடுத்ததாக தொழில்நுட்பப் பயன்பாடு. ஏ எஸ் ஐ வாயிலாக….. புரியப்பட்ட அகழ்வாய்வு, ஆதாரங்கள், இது பெரிய விஷயம்.
மேலும் நான்காவதாக, இந்தியாவின் கோடானுகோடி குடிமக்களும் தங்களாலான பணத்தை அளித்து அனைவரின் பங்களிப்போடும், இந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் அரசுக் கருவூலத்திலிருந்து உருவாக்கப்பட்டது அல்ல. இது… இது எப்படிப்பட்ட முன்னெடுப்பு என்றால், இது நம் பாரதத்தினுடைய சுயமரியாதைக்கு பாரதத்தின் திறமைக்கு பாரதத்தின் கனவுகளுக்கு பாரதத்தின் சங்கல்பங்களுக்கு, மேலும் பாரதத்தின் வருங்காலத் தலைமுறைகளுக்கு, மிகப்பெரிய உத்வேகம் அளிக்கவல்லதாக இருக்கும்.
ஒரு தேசம் ஒரே தேர்தல் எங்களுடைய இலக்கு
நாட்டுமக்களிடமும் முதன்முறை வாக்காளர்களிடமும் என் வேண்டுகோள். நீங்கள் தேசத்திற்காக வாக்களியுங்கள். அரசியல் காரணங்களுக்காக அல்ல, தேசத்தின் பெயரால் வாக்களியுங்கள். உங்களுடைய அடுத்த 25 ஆண்டுக்கால எதிர்காலத்தின் பெயரால் வாக்களியுங்கள். இதுவே உங்களிடம் என் வேண்டுகோள். அடுத்து நான் நாட்டுமக்களிடம் கூற விரும்புவது மேலும், அனைத்து அரசியல்கட்சித் தொண்டர்களிடமும் கூற விரும்புவது, வெப்பம் மிகவும் தகிக்கிறது, இந்த வெப்பத்தில் அனைத்துக் கட்சித் தொண்டர்களும் பணியாற்றுகிறார்கள். அவர்களிடமெல்லாம் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன் நிறைய தண்ணீர் குடியுங்கள். நிறைய அலைந்தாலும் கூட நிறைய தண்ணீர் பருகுங்கள். இந்தக் கோடையில் இந்த வெப்பத்தில், வாக்காளர்களிடமும் விண்ணப்பிக்கிறேன். எத்தனை தான் வெப்பம் இருந்தாலும், நீங்கள், கண்டிப்பாக வாக்களியுங்கள். முடிந்தால்….. காலையில் சீக்கிரமாகவே சென்று வாக்களியுங்கள். மேலும் ஜனநாயகத்தின் உற்சவத்தைப் போலவே தேர்தல்களைக் கொண்டாடுங்கள். இதுவே நாட்டுமக்களிடம் என்னுடைய வேண்டுதல்கள்.
வினா – அடுத்த தேர்தல்களை நீங்கள் வசந்த காலத்தில் ஒரு தேசம் ஒரே தேர்தல்களின் போது செயல்படுத்துங்களேன்!!
விடை – நீங்கள் சரியான விஷயத்தை முன்வைத்திருக்கிறீர்கள். ஒரு தேசம் ஒரே தேர்தல், எங்களுடைய செயல்திட்டமாகும். நாங்கள் நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறோம். நாங்கள் குழுவையும் அமைத்திருக்கிறோம் அதன் அறிக்கையும் வந்து விட்டது. ஒரு தேசம் ஒரே தேர்தல் விஷயத்திலே, தேசத்திலே, பலர் உடன்பட்டிருக்கின்றார்கள். அனைத்துக் கட்சிகளும், பல பேர் இதிலே, குழுவுக்கு… அவர்கள், ஆலோசனைகள் அளித்திருக்கிறார்கள். மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள். மிக நூதனமான ஆலோசனைகள். நம்மால் இந்தக் குழுவின் பரிந்துரையை அமல் செய்ய முடிந்தால் தேசத்திற்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும்.