திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்!
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் இன்று காலை ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்தனர்.
அமைச்சர்களை வரவேற்று, வேதபண்டிதர்கள் மூலம் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கச் செய்து, ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.
பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு நவராத்திரி உற்சவம் நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று சுவாமி வீதி உலா வந்ததை குடும்பத்தினருடன் தரிசனம் செய்து இன்று ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. பிரம்மோத்ஸவ விழாவிற்காக தேவஸ்தான அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுகவின் பெண்கள் தலைமை ஏற்பார் என்று கூறியது அவருடைய சொந்தக் கருத்து! அவர் அதற்கு விளக்கமும் அளித்துள்ளார். பெண்களுக்கான தேர்தல் கூட்டத்தில் அவர் பேசிய போது அவ்வாறு பேசியதாக தெரிவித்துள்ளார்… என்றார்.
தொடர்ந்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் நாடு முழுவதும் நல்ல மழை பெய்து சகல சந்தோஷத்துடன் அனைவரும் இருக்க வேண்டும் என சுவாமியை வேண்டிக் கொண்டேன்!
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து கேட்கிறீர்கள். ஸ்டெர்லைட் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது என்று கூறினார்.