திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி வகுப்பறைக்கு உள்ளே புகுந்து அரசுப் பள்ளி ஆசிரியரை உறவினர்கள் அடித்து உதைத்தனர். இதில் ஆசிரியரின் மண்டை உடைந்தது. மாணவ மாணவிகள் முன்னிலையில் நடைபெற்ற தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியராக இருப்பவர் கண்ணன். இவர் மேல்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
மாணவி 5 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்தார். இதனால் அந்த மாணவியிடம் பெற்றோர் ஏன் என்று விசாரித்துள்ளனர். அப்போது அவர் தனக்கு ஆசிரியர் கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு கடும் கோபம் அடைந்த உறவினர்கள், அரசுப் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் கண்ணனிடம் விசாரிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அவரை வகுப்பறைக்குள் தள்ளி, சரமாரியாகத் தாக்கினர்.
ஆசிரியர் உட்காரும் நாற்காலியை எடுத்து தலையில் அடித்ததில், அவர் மண்டை உடைந்தது. கண்ணன் தலையில் ரத்தம் கொட்டியதைக் கண்டு வகுப்பில் இருந்த மாணவிகள் கூச்சலிட்டனர். சோர்வடைந்த கண்ணன், வகுப்பறையின் கடைசி இருக்கையில் தலையைப் பிடித்தபடி அமர்ந்து கொண்டார்.
சம்பவம் குறித்து அறிந்த செங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் கண்ணனுக்கு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மாணவியின் உறவினர்கள், தலைமை ஆசிரியர் சாந்தகுமாரின் அறைக்குச் சென்று முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியர்! இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி, உள்ளிட்ட அதிகாரிகள், தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டனர்.