
லாகூர்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இந்து பெண் கல்லூரி ஹாஸ்டல் விடுதியில் கழுத்தில் துணியால் இறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது தற்கொலை என காவல்துறையினர் கூறும் நிலையில் யாரோ தங்கள் மகளை கொன்றுவிட்டதாக அந்த மாணவியின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஏராளமான இந்துக்கள் வசிக்கிறார்கள். இந்த மாநிலத்தில் உள்ள கோட்கி நகரைச் சேர்ந்த இந்து பெண் நம்ரிதா சந்தாரி. முதலாம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவி ஆவார். இவர் துணியால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் ஹாஸ்டலில் பிணமாக கிடந்தார்.
நேரில் வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மாணவி உயிரிழந்த சம்பவத்தை தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் குடும்பத்தினர் கொலை என வாதிடுகின்றனர்.
இது தொடர்பாக உயிரிழந்த நம்ரிதாவின் அண்ணன் விஷால் (மருத்தவர்) கூறுகையில், ” முதல்கட்ட பரிசோதனையில் கொலை என்பது தெரியவந்துள்ளது. இது தற்கொலை அல்ல. தற்கொலை செய்தால் அதற்கான தடங்கள் வேறு மாதிரி இருக்கும். எனது சகோதரியின் கழுத்தைச் சுற்றி கேபிள் மார்க்குகள் உள்ளது. கையிலும் கேபிள் தடம் உள்ளது. ஆனால் என் தங்கையின் தோழி துப்பட்டாவில் தூக்கு போட்டு இறந்ததாக கூறுகிறார். நான் என் தங்கையிடன் இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய போது எந்த பிரச்சனையும் இல்லை என்றே என்னிடம் சொன்னாள். எனவே அவள் தற்கொலை செய்திருக்க வாய்ப்ப இல்லை. எனவே இந்த கொலை வழக்கு குறித்து நியாயமாக விசாரிக்க வேண்டும்” என்றார்.
சிந்து மாகாணத்தில் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள 1000 இந்து பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் கட்டாயப்படுத்தி முஸ்லீம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த சிந்து அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது