
புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகியான லேடி காகா, தனது டிவிட்டர் பக்கத்தில், சமஸ்கிருத பிரார்த்தனையான லோகா சமஸ்தாஸ் சுகினோ பவந்து என்ற, உலகம் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் இருக்கட்டும்! என்ற பிரார்த்தனையை வெளியிட்டிருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பாப் பாடல்களில் புகழ்பெற்ற பெண் பாடகராக இருப்பவர் அமெரிக்கப் பாடகி லேடி காகா. பாடல்களுக்கு மட்டுமல்லாது வித்தியாசமான சிகை அலங்காரம், ஒப்பனை, ஆடை இவற்றாலும் கவரப்பட்டு ரசிகர்களைப் பெற்றவர் லேடி காகா.
இத்தாலிய அமெரிக்கரான லேடி காகா, சில தினங்களுக்கு முன் லாஸ் வேகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் மேடையில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென தவறி ரசிகர்கள் கூடியிருந்த பக்கத்தில் விழுந்தார். இதனைத் தொடர்ந்து அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் விரைந்து வந்து லேடி காகாவை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து மேடைக்கு வந்த லேடி காகா, ”பிரச்னை ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாக உள்ளது” என்று கூறி, நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். இதனை ரசிகர்கள் பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியில் லேடி காகா மேடையில் தவறி விழுந்ததில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது
இந்நிலையில், இன்று அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட கருத்துப் பகிர்வில், உலகில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் திகழட்டும் என்ற பொருள் படும் லோகா சமஸ்தாஸ் சுகினோ பவந்து என்ற சமஸ்கிருத பிரார்த்தனையை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவுக்கு பதில் கூறியவர்கள், அந்த பிரார்த்தனை மந்திரத்தின் மூல கவிதையுடன் ஓம் சாந்தி ஓம் சாந்தி என்ற பிரார்த்தனையின் பொருளுடன் அவருக்கு பின்னூட்டம் இட்டு வருகின்றனர்.