டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

‛கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். அதிபரின் உத்தரவு நாட்டின் பாதுகாப்புக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது

வாஷிங்டன்:

இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து அந்த நாட்டு அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

அண்மையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், ஏழு நாடுகளிலிருந்து அகதிகள் மற்றும் பயணிகள், அமெரிக்காவுக்கு வர தடை விதித்தார்.இதற்கு, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த உத்தரவின் காரணமாக அமெரிக்கா வாழ் வெளிநாட்டவர்கள் சட்டச் சிக்கலுக்கும், மன உலைச்சலுக்கும் ஆளாவர்கள் என வாஷிங்டன் மற்றும் மினிசோட்டா மாகாணங்களை சேர்ந்த சிலர் , சியாட்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .

வழக்கை விசாரித்த நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட், அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

‛கோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். அதிபரின் உத்தரவு நாட்டின் பாதுகாப்புக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது’ எனக் கூறினார்.