ஏமனில் இருந்து 350 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 350 பேர் ஐஎன்எஸ் சுமத்ரா கப்பல் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் அங்கே இருப்பவர்களையும் மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏடன் துறைமுகத்தில் இருந்து 350 பேரை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஐஎன்எஸ் சுமத்ரா கப்பல் இன்று இரவுக்குள் அண்டை நாட்டை அடையும் என்று இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் ஏமன் தலைநகர் சனாவில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க 180 பேர் பயணிக்கக் கூடிய இரு A320 ரக விமானங்கள் மஸ்கட்டில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியர்களை மீட்கும் பணியைப் பார்வையிட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ.கே. சிங் அங்கே விரைந்துள்ளார்.