9 வருடங்களுக்கு முன் நடந்த நடராஜா ரவிராஜ் கொலையில் இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது

இலங்கையில் கடந்த 2006ஆம் ஆண்டில் தமிழ் அரசியல்வாதி நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு அதிகாரிகள் உட்பட கடற்படையைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இலங்கையில் ராஜபட்ச அதிபராக இருந்தபோது தமிழ் அரசியல்வாதி நடராஜா ரவிராஜ் எம்.பி தனது வீட்டிலிருந்து காரில் கிளம்பிய போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் அவரது பாதுகாப்பு அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது, இந்தப் படுகொலை தொடர்பாக இலங்கை போலீஸ் தகவல் தொடர்பாளர் ருவான் குணசேகரா சில தகவல்களைத் தெரிவித்தார். அதன்படி, ரவிராஜ் படுகொலை தொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரிகள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையைச் சேர்ந்த அம் மூவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இளைஞர்கள் பலர் கடத்தப்பட்டது மற்றும் காணாமல் போனது தொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் முடிவில் முக்கிய பிரபலங்கள் கைதாகும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட நடராஜா ரவிராஜ் யாழ்ப்பாண நகர முன்னாள் மேயர் மற்றும் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சண்டை நடந்த போது, வெளிப்படையாக சில கருத்துக்களைத் தெரிவித்தவர். இவரது படுகொலை மனித உரிமை மீறல் என அப்போது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.