ஐசிசி தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் விலகக் காரணம் என்ன?

ICC-mustafa-kamaal ஐசிசி தலைமைப் பதவியில் இருந்து அதன் தலைவராக இருந்துவந்த வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பின்னர், ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை அளிக்க தன்னை அழைக்காததால் முஸ்தபா கமால் கடும் கோபத்தில் இருந்தார். இந்தக் கோபத்தாலேயே தனது பிரசிடெண்ட் தலைமைப் பதவியை அவர் ராஜினாமா செய்தாராம். மேலும், ஐசிசி தலைவர் (Chairman) சீனிவாசனுடனான மோதலின் எதிரொலியாகவே முஸ்தபா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அமைப்பில், தலைவரைக் காட்டிலும் பிரசிடென்ட் பதவி என்பது சற்றே உயர் பதவி என்று கருதப் படுகிறது. இருந்தபோதும், தலைவருக்கே செயல்திட்ட அதிகாரங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதும், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வழங்க தன்னை அழைக்கவில்லை என்ற வருத்தமும் ஆத்திரமும் முஸ்தபா கமாலுக்கு இருந்தது. மேலும், இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், வங்க தேச வீரர் ஒருவர் போட்ட பந்தை நோபால் என்று அறிவித்த போது, அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஐசிசி இந்திய அணிக்கு சாதகமாக செயல்படுவதகவும் தாம் ராஜினாமா செய்வதாகவும், முஸ்தபா கமால் உடனே ஒரு அறிக்கை விட்டார். இந்நிலையில், டாக்காவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியபோது, “உலகக் கோப்பையை வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை வழங்க நான் அனுமதிக்கப் படவில்லை. இதனால் எனது தூக்கம் பாழானது. ஏனெனில் நான் எனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறேன். எனது உரிமை பறிக்கப்பட்டது. நான் எனது ராஜினாமா கடிதத்தை ஐசிசி-க்கு அனுப்பிவிட்டேன். என்னால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது. இவர்கள் கிரிக்கெட்டை நடத்த தகுதியில்லாதவர்கள். இவர்கள் ஆட்டத்தை மாசுபடுத்தி வருகின்றனர். நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்பதை மக்கள் ஆய்வு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். இருப்பினும், இந்திய வங்கதேசப் போட்டியில், ரோஹித் சர்மா கொடுத்த கேட்சை மறுக்கும் விதமாக நடுவர் நோ பால் கொடுத்த விவகாரத்தை அடுத்து, ஐசிசியை கடுமையாக விமர்சனம் செய்ததால், முஸ்தபா கமாலை உலகக் கோப்பையை வழங்க அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், முஸ்தபா கமாலின் விமர்சனத்துக்கு சீனிவாசன் வெளிப்படையாக தனது கருத்தை தெரிவிக்கவில்லை என்றாலும் ஐசிசி வாரிய உறுப்பினர்களிடன் தனது அதிருப்தியை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், ஐசிசி விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஐசிசி நடத்தும் தொடர்கள் அனைத்திலும் கோப்பையை பிரசிடெண்ட் மட்டுமே அளிக்க முடியும் என ஜனவரி 2015-இல் முழு உறுப்பினர் குழுவும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு முடிவு செய்தனராம். அதனால் இதில் எந்த விமர்சனத்துக்கும் இடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஐசிசி., யில் உலகக் கோப்பை முடிந்த கையோடு ஒரு சூட்டைக் கிளப்பிவிட்டார் முஸ்தபா கமால்.