மனைவியுடன் போனில் பேசியபடி தவறி விழுந்தவர் பலி: ஆஸ்திரேலியாவில் இந்தியருக்கு நேர்ந்த பரிதாபம்

australiaசிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போனில் பேசிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவர், மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் ஜா, ஆஸ்திரேலியாவின் வடக்கு சிட்னியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மெக்யரிபார்க் என்ற இடத்தில் வசித்து வந்த பங்கஜ் ஜா தற்போதுதான் திருமணம் முடிந்து மனைவியை இந்தியாவில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளார். நள்ளிரவு ஒரு மணி அளவில் மாடி பால்கனியில் இருந்து இந்தியாவில் உள்ள மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது திடீரென பால்கனியில் இருந்து தவறி கிழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரந்து வந்த மருத்துவக் குழுவினர், பங்கஜை பரிசோதித்து விட்டு, அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.