சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த ஏமன் அல்-காய்தா பயங்கரவாதிகள்

ஏமனில் சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்தனர் அல்-காய்தா பயங்கரவாதிகள். ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஹைதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் ஏடன், சனா உள்ளிட்ட நகரங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்து வருகின்றனர். ஏமனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஏமனில் ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள சிறை ஒன்றை அல்-கொய்தா பயங்கரவாதிகள் இன்று தாக்கியுள்ளனர். பின்னர், அச்சிறையில் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த தங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர் காலித் படார்பி உட்பட 300 கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்க வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு சிறை அதிகாரிகள் மற்றும் 5 கைதிகள் கொல்லப் பட்டதாக ஏமன் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.