தற்கொலை செய்ய இணையத்தில் வழி தேடிய ஜெர்மன்விங்ஸ் துணை விமானி

german-airways பெர்லின்: அண்மையில் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தின் துணை விமானி வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்கு உள்ளாக்கினார் என்று கூறப்படும் நிலையில், அவர் குறித்து வெளியான அண்மைத் தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஜெர்மன்விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையின் உச்சியில் மோதி விபத்துக்கு உள்ளானதில், விமானத்தில் இருந்த 152 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், துணை விமானி ஆண்ட்ரூஸ் லுபிட்ஸ் வீட்டில் இருந்து அவரது கணினியை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான வழி முறைகளை இணையத்தில் தேடி இருப்பது தெரியவந்தது. மேலும், அது குறித்து விதமான இணைய தளங்களுக்குச் சென்று அவர் பார்த்திருப்பதும், விமானிகள் அறைக் கதவின் பாதுகாப்பு குறித்தும் அவர் இணையத்தில் தேடியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம், அவர் கடும் மன அழுத்தத்தில் சிக்கியிருந்தார் என்றும், அவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விமானம் புறப்பட்ட 32வது நிமிடத்தில் விமானி வெளியே சென்று, மீண்டும் காக்பிட் அறைக்கு வந்தபோது, அந்தக் கதவைப் பூட்டிய துணை விமானி அதைத் திறக்கவில்லை என்பதும், அப்போது, ஒரு மலை முகட்டின் விமானத்தின் இடதுபுற இறக்கை மோதி விமானம் அதிர்ச்சிக்கு உள்ளானதும், தொடர்ந்து விமானம் மோதிச் சிதறியதும் ஒரு விடியோ உரையாடல் பதிவில் இடம்பெற்றிருந்தது.