Home உலகம் என்னால் உன்னுடன் இருக்க முடியவில்லை.. ஆனால், இங்கு இருக்கிறேன் லவ் யூ..! தனிமையில் சிகிச்சை பெற்ற...

என்னால் உன்னுடன் இருக்க முடியவில்லை.. ஆனால், இங்கு இருக்கிறேன் லவ் யூ..! தனிமையில் சிகிச்சை பெற்ற மனைவிக்கு பதாகையுடன் காத்திருந்த கணவன்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் கோனர். 44 வயதான இவரின் மனைவி கெல்லிக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக ஜனவரி மாதம் முதல் மருத்துவமனைக்கு சென்று வருகிறார்.

மனைவியின் கேன்சர் சிகிச்சைக்காக மருத்துவர்களிடம் பேசிவந்தவர் அந்த மாதமே தன் மனைவியை டெக்ஸாஸில் உள்ள மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சைக்கு அனுமதித்தார். ஆனால், மற்ற சிகிச்சை நேரங்களில் இருப்பதுபோல் ஆல்பர்ட்டால் மனைவியுடன் மருத்துவமனையில் தங்க முடியவில்லை.

கொரோனா என்னும் கொடிய நோய் காரணமாக மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளின் உறவுகளை அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனால் ஆல்பர்ட் அங்கிருந்து செல்ல நேர்ந்தது. இதற்கிடையேதான் கெல்லிக்கு கீமோதெரபி சிகிச்சை முடிய தனி வார்டில் மாற்றப்பட்டுள்ளார்.

கீமோதெரபி சிகிச்சையால் தலைமுடி இழந்து சோகத்தில் இருந்த கெல்லி, தன் கணவர் வீட்டில் குழந்தைகளுடன் இருப்பார் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரது போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அது ஆல்பர்ட்டிடம் இருந்து வந்த மெசேஜ்.

மனைவியை இந்த சூழ்நிலையில் தனியாக விட்டுப்போக மனம் இல்லாமல் மருத்துவமனை வாசலில் உள்ள கார் பார்க்கிங்கில் உட்கார்ந்து வித்தியாசமாக தனது ஆதரவைக் காட்டினார் ஆல்பர்ட்.

கெல்லி தங்கியுள்ள தனி வார்டில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தால் தெரியும் வகையில் பார்க்கிங் பகுதியில் பதாகையில், “என்னால் உன்னுடன் இருக்க முடியவில்லை. ஆனால், நான் இங்கு இருக்கிறேன் உனக்காக. லவ் யூ” என்று எழுதி உட்கார்ந்திருந்துள்ளார்.

இதை கெல்லி புகைப்படமாக எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட தற்போது இது வைரலாகி வருகிறது. தன் மனைவிமீது கொண்ட காதல் காரணமாக கொரோனா அச்சத்திலும் மருத்துவமனை வாயிலில் ஆல்பர்ட் அமர்ந்திருப்பதை நெட்டிசன்கள் வரவேற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக நியூஸ் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ஆல்பர்ட், “சிகிச்சையின்போது அவளுடன் இருப்பேன் என்று கெல்லிக்கு வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் அதை மீறுவதுபோல் தோன்றியது. அதேநேரம், கொரோனா காரணமாக மருத்துவர்கள் இங்கு இருக்க முடியாது என்று கூறியதன் நியாயத்தையும் புரிந்துகொண்டேன்.

இந்தச் சூழ்நிலையில், செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற நோயாளிகள் உடல்நிலைப் பற்றி சிந்திக்கும்போது, ​​அது சரியான அர்த்தத்தைத் தருகிறது. நம்மால் முடிந்தவரை, அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்பதால் பார்க்கிங்கில் உட்கார்ந்தேன். எனது செயலைப் பார்த்து நிறைய செவிலியர்கள் என்னிடம் வந்து பேசினர். எனக்கு அது சங்கடமாக இருந்தது. இருந்தாலும், இங்குதான் நான் இருக்கிறேன்” என்கிறார்.

கெல்லி பேசுகையில், “அவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியவுடன், நான் ஜன்னலைத் திறந்து பார்த்தேன். அவர் அங்கேயே இருந்தார். அவரின் அன்பு உடனடியாக என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது, அந்த நேரத்தில் அவர் அப்படிச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் இருந்த அன்பை உணர்ந்தேன்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

மனைவி நோயாளி என்று தெரிந்தாலே விட்டு விட்டு போகும் கணவர்களுக்கு மத்தியில் கொரோனா போன்ற உயிர்கொல்லி அபாயத்திலும் மனைவிக்கு அருகாமையில் இருப்பதை உணர்த்தி அன்பினை வெளிப்படுத்தியுள்ள உண்மையான ஆண்மகன் ஆல்பர்ட்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version