மலேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து; முன்னாள் அமைச்சர் உள்பட 6 பேர் பலி

helicopter-malaysia கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்துச் சிதறியதில் அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் தெற்கு மாகாணமான செமன்யீக் பகுதிக்கு அந்நாட்டு முன்னாள் அமைச்சரும் மலேசிய முன்னாள் தூதருமான் ஜமாலுதீன் ஜர்ஜிஸ், பிரதமரின் உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணித்தனர். வடக்கு கான்தன் நகரிலிருந்து செமினி நகர் அருகே வானில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தீப்பற்றி வெடித்துச் சிதறியது. ஹெலிகாப்டர் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் அடர்ந்த காட்டிற்குள் கீழே விழுந்து தீப்பிடித்து விபத்திற்குள்ளானதாகத் தெரிகிறது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முன்னாள் அமைச்சர் ஜமாலுதீன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியாயினர். பின்னர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. விபத்து குறித்து பிரதமர் நஜிப் ரசாக் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மலேசியப் பிரதமர் மகளின் திருமணத்துக்கு சென்று திரும்பியபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்ததாக மலேசிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.