― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?கோவிட்-19: இந்திய வம்சாவளி மருத்துவருக்கு விருது!

கோவிட்-19: இந்திய வம்சாவளி மருத்துவருக்கு விருது!

- Advertisement -

ரவி சோலங்கி என்ற இந்திய வம்சாவளி மருத்துவர், நோய்த் தொற்று தடுப்பு சேவைக்கான, பிரிட்டன் ராயல் அகாடமி ஆஃப் என்ஜினியரிங் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கோவிட்-19 நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கையாளுவதற்கு, பொறியியல் ரீதியிலான தீர்வுகளை சிறந்த முறையில் பயன்படுத்தும் குழுக்களை பாராட்டவும் கௌரவிக்கும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது.

29 வயதான சோலங்கி லெஸ்டர் நகரில் பிறந்தவர். குஜராத்தில் இருந்து பிரிட்டனில் குடியேறிய இந்திய தம்பதியின் மகன்.

இவருடைய தாயார் மது, செவிலியராக உள்ளார். தந்தை காண்ட்டி கணக்காளராகப் பணிபுரிகிறார்.

1992ல் ரவி சோலங்கியின் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது

இப்போது ரவியின் குடும்பம் அங்குதான் வசிக்கிறது. அவருடைய இளைய சகோதரி பிரியங்கா, அமெரிக்காவில் மருத்துவம் பயின்று வருகிறார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்காக திரும்பிச் செல்ல 2011ல் ரவி சோலங்கி முடிவு செய்தார். பின்னர் நரம்பு சிதைவு துறையில் பி.எச்டி பெற்றார். அதன்பிறகு லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் இளநிலை மருத்துவராக அவர் பணியாற்றி வருகிறார்.

பிரிட்டனில் சுகாதார சேவை அலுவலர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், புதிய தேசிய சுகாதார சேவை (என்.ஹெச்.எஸ்.) அறக்கட்டளைக்கு பாதுகாப்பான இணையதளத்தை, தனது நண்பர் ரேமாண்ட் சீயம்ஸ் உடன் இணைந்து இவர் உருவாக்கியுள்ளார்.

HEROES என்ற அந்த இணையதளத்தை அவர்கள் உருவாக்கினர். ரோண்ட் சீயம்ஸ் பொறியாளராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் இவர்கள் இருவரும் 36 மணி நேரத்தில், https://www.helpthemhelpus.co.uk/ என்ற இந்த இணையதளத்தை உருவாக்கினர்.

என்.எச்.எஸ். இருதய நோய் சிகிச்சை நிபுணர் டோமினிக் பிமென்ட்டா என்பவர், HEROES அறக்கட்டளையை தொடங்கினார். முன்னாள் ப்ரீமியர் கால்பந்து வீரர் ஜோ கோலே இதற்கு ஆதரவு அளித்தார்.

சுகாதார சேவையில் உள்ள அலுவலர்களுக்கு முழு உடல் பாதுகாப்புக் கவச உடை (பி.பி.இ.), மானியங்கள், கலந்தாய்வு, குழந்தை பராமரிப்பு, போக்குவரத்து, உணவு மற்றும் இதர வசதிகளுக்கு இந்த அறக்கட்டளை ஏற்பாடு செய்கிறது.

லண்டனில் உள்ள பிபிசியின் வெளிநாடுவாழ் தெற்காசியர் விவகாரங்களுக்கான செய்தியாளர் ககன் சபர்வாலிடம் பேசிய ரவி சோலங்கி, இந்தத் திட்டத்தில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது என்பதை விளக்கினார்.

அது பிபிசிக்கான பிரத்யேகமான பேட்டியாக அமைந்திருந்தது. “ஒரு நாள் பின்னிரவில், சுகாதார அலுவலர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஒரு புதிய செயல் திட்டத்தை உருவாக்க விரும்புவதாக டாக்டர் டோமினிக் பிமென்ட்டா ட்விட்டரில் வெளியிட்ட பதிவை நான் பார்த்தேன். ட்விட்டர் மூலம் அவரை நான் தொடர்பு கொண்டேன்.

மறுநாள் காலை நானும் ரேமாண்ட்டும் தொலைபேசி மூலம் டாக்டர் பிமென்ட்டாவுடன் பேசினோம். அப்படித்தான் இந்த இணையதளம் ஆரம்பமானது” என்று அவர் கூறினார்.

ரவி சோலங்கியும், ரேமாண்ட் சீயம்ஸ்-ம் இந்த ஆன்லைன் தளத்தை உருவாக்க தொடங்கிய சில மணி நேரத்தில், ஜோ கோலே தொலைக்காட்சியில் தோன்றி, புதிய அறக்கட்டளைக்கு ஆதரவு திரட்டினார். இணையதளம் தொடங்கி மூன்று நாட்களுக்குள் HEROES -ன் முக்கியமான அங்கமாக மாறிவிட்டது.

இந்த இருவரும் உருவாக்கிய இணையதளம் நிதி அளித்தல், கலந்தாய்வு சேவைகள் அளித்தல், குழந்தை பராமரிப்பு மற்றும் சுகாதார அலுவலர்களுக்குத் தேவைப்படும் இதர சேவைகளை அளிப்பதாக உள்ளது. நெருக்கடியான நேரத்தில் என்.எச்.எஸ். அலுவலர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான நன்கொடை திரட்டுவதற்கு, அறக்கட்டளைக்கு உதவும் வகையில் பெருமளவு மக்கள் நிதி அளிக்கும் தொழில்நுணுக்க வசதி இதில் உள்ளது.

செயல்திறன்மிக்க ஒரு தளத்தை, குறைந்த நேரத்தில், சேவை அடிப்படையில் உருவாக்கிக் கொடுத்தமைக்காக, ராயல் அகாடமி ஆஃப் என்ஜினியரிங் அமைப்பு இந்த இருவரையும் பாராட்டியுள்ளது.

“ரவி மற்றும் ரேமாண்ட்டின் ஓய்வில்லாத உழைப்பு காரணமாக சீக்கிரத்தில் மக்களிடம் நிதி திரட்டுவதற்கு புதிய அறக்கட்டளைக்கு சாத்தியமானது. அதன் மூலம் பிரிட்டனில் கோவிட் – 19 பாதிப்பு தீவிரமாக இருந்தபோது என்.ஹெச்.எஸ். அலுவலர்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்க முடிந்தது” என்று அகாடமியின் பாராட்டுப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

“அவர்களுடைய தொழில்நுட்ப அறிவு காரணமாக 90,000 என்.எச்.எஸ். அலுவலர்களுக்கு HEROES உதவி 3 மாதங்களில் கிடைத்தது. டிஜிட்டல் தளத்தை விரிவுபடுத்தி, சுகாதார அலுவலர்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கச் செய்வதற்கான இவர்களின் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக்குரிய இந்த விருது கிடைத்திருப்பது பற்றி ரவியிடம் கருத்து கேட்டபோது, “இந்த விருது பற்றி ஜூலை மாத ஆரம்பத்தில் எங்களுக்குத் தெரிய வந்தது. இந்த விருதுக்கு எங்களுடைய பெயர் முன்மொழியப்பட்டது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.

நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்! எங்களுடைய பணிக்கான அங்கீகாரமாக மிகுந்த பணிவுடன் இதை நாங்கள் பெறுகிறோம். இதற்காக நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

“எங்கள் குடும்பத்தினரும், பாசத்துக்கு உரியவர்களும் கூட, இந்த விருது பற்றிய தகவல் அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். எங்களுடைய சாதனை குறித்து அவர்கள் மிகுந்த பெருமை அடைந்திருக்கின்றனர். எங்கள் சக அலுவலர்களுக்கும் கூட இது ஆச்சர்யமானதாக இருந்தது. ஆனால் இதுபோன்ற ஒரு முன்முயற்சிக்கு ராயல் அகாடமி ஆஃப் என்ஜினியரிங் போன்ற அமைப்பின் அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர்” என்றார் அவர்.

தங்கள் பணிக்காக தங்களிடம் பிறர் காட்டிய அன்பு, ஆதரவு மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றுக்கு, தாமும், ரேமாண்ட்டும் மிகுந்த நன்றி செலுத்துவதாக ரவி கூறினார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இதற்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள வெள்ளிப் பதக்கங்களை அவர்கள் பெறவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version