
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குச்சீட்டில் தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகள் இடம்பெற்றுள்ளன. இது ஓர் அதிசயமான விஷயமாக சமூகத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்களும் வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதில் சான்டாகிளாரா பகுதி மக்கள் அண்மையில் தங்கள் வாக்கினைப் பதிவு செய்தனர். இதற்காக வைக்கப்பட்ட வாக்குப் பெட்டியில் ஆங்கிலம், சீனம் உள்ளிட்ட மொழிகளுடன் 6 இந்திய மொழிகளும் இடம்பெற்றிருந்தன. வாக்குப்பெட்டி, வாக்காளர் விண்ணப்பப் படிவம், வாக்காளர்கள் வாக்களிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவை இந்திய மொழிகளிலும் வழங்கப் பட்டுள்ளன.
தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வாக்காளர் விண்ணப்பப் படிவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான தற்போதைய அதிபர் டிரம்ப், ஜோ பிடன் இருவருமே, அமெரிக்கா வாழ் இந்தியர்களைக் குறிவைத்தே தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை முன்வைத்தனர். பிரதமர் மோடியின் நண்பர் என்று கூறி இந்தியர்களைக் கவர முயன்றார் டிரம்ப். ஜோபிடன், தங்கள் கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை முன்னிறுத்தி ஆதரவு தேடி வருகிறார்.
ஜனநாயகக் கட்சி தங்களின் தேர்தல் டிஜிட்டல் விளம்பரங்களை 14 இந்திய மொழிகளில் வெளியிட்டிருந்தது! இது போன்ற நடவடிக்கைகளால், இந்தத் தேர்தலில் அமெரிக்க வாழ் இந்துக்கள் இந்த முறை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.