
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, அதிரடியாக ஆடி, 43 ஓவரில் 281 ரன் குவித்தது. மழை பெய்ததால், 43 ஓவரில் 298 ரன் என்ற வெற்றி இலக்கு நியூசிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்கம் முதலே நியூசிலாந்து அதிரடியாக ஆடி, ரன் சேர்த்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் வெற்றி வாய்ப்பு வந்தது. ஆனால், பதட்டத்தில், 2 ரன் அவுட் வாய்ப்பையும், 3 கேட்ச் வாய்ப்புகளையும் தென்னாப்பிரிக்க வீரர்கள் கோட்டை விட்டனர். இதனால் வெற்றி கைநழுவிப் போனது. இது தவிர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டு கடைசி ஓவரில், கடைசி பந்துகள் வரை வெற்றிக்கான விறுவிறுப்பை தங்கள் வசம் வைத்திருந்தும், வெற்றி கைநழுவியதில், தென்னாப்பிரிக்க வீரர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். மார்கல் மைதானத்தில் நடுவே அமர்ந்து கேவிக் கேவி அழுது தீர்த்தார். அவர் கண்களில் நீர் கரைபுரண்டது. முக்கியமான ஒரு போட்டி கைவிட்டுப் போன சோகத்தில், அவரை தேற்ற உடன் இருந்த வீரர்கள் வந்தனர். தென்னாப்பிரிக்க ரசிகர்களும் பெருத்த சோகத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினர்.