இந்தோனேசியாவில் வீடு வாங்குபவருக்கு மனைவி இலவசம் என்ற விநோத விளம்பரம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் நடத்தும் நிறுவனங்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் விநோதமாக மனைவி இலவசம் என்ற பெயரில் விளம்பரம் இந்தோனேஷியாவில் வெளியாகியுள்ளது. “இது ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் இந்த வீட்டை வாங்கினால், இந்த வீட்டின் உரிமையாளரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள கேட்கலாம். ” என இந்த விளம்பரம் வெளியாகி, இப்போது இணையத்தில் மிகப் பிரபலமடைந்துள்ளது. இந்த விளம்பரத்தில், 40 வயது மதிக்கத்தக்க வீட்டு பெண் உரிமையாளரான லீனா காரில் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பல்வேறு வசதிகளுடன் இந்த வீடு உள்ளது. இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகனம் நிறுத்துமிடம் மற்றும் சிறிய மீன்குளம் ஆகிய வசதிகள் வீட்டில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விளம்பரத்தில் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஜாவா தீவில் உள்ள இந்த வீட்டின் மார்க்கெட் விலை 999 மில்லியன் ரூபயா (75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டை விற்பனை செய்தாலும், தொடர்ந்து உரிமையாளராக நீடிக்கவே லீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று இணையதள தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும், லீனாவை அணுகிய செய்தியாளர்கள், அவரிடம் இது குறித்துக் கேட்டனர். இதனால் லீனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரும் விசாரித்து உள்ளனர். போலீஸாரிடம் இது என் யோசனை அல்ல என்று விவரித்தேன் என்றார் லீனா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான லீனா பேசுகையில், வீட்டை விற்பனை செய்ய ஆட்களை கண்டுபிடிக்கவே என் நண்பரிடம் உதவி கேட்டேன். கணவர் தொடர்பாகவும் பேசினேன். குறிப்பிட்ட நபர்களிடம் இந்தத் தகவலை அவர் தெரிவிப்பார் என்றே அவரிடம் கூறினேன். இணையதளங்களில் பதிவு செய்யச் சொல்லவில்லை. வீடு வாங்க விருப்பம் உள்ளவர் திருமணம் ஆகாதவர், மனைவியை இழந்தவர், மனைவியைத் தேடுபவர் என்ற பிரிவில் இருந்தால் எனக்குத் தெரியப் படுத்துங்கள் என்றே நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். நானும் விதவை என்பதால் என்னை அவர் அறிந்து கொள்ள முடியும் என்பதால் அப்படிக் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இதுபோன்ற விளம்பரம் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடு வாங்கினால் மனைவி இலவசம்: இந்தோனேஷியாவில் விநோத விளம்பரம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week