அமெரிக்காவை தொடர்ந்து மெக்சிகோவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவை அடுத்து அதன் அண்டை நாடான மெக்சிகோவிலும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அன்று மத்திய மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பள்ளி மாணவர்கள், 2 பள்ளி மாணவிகள் மற்றும் 65 வயதான ஒரு பெண்மணி என மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடந்த மாதம் மெக்ஸிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பெண்கள் உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்திய ஆண்டுகளில் மெக்சிகோவில் குவானாஜுவாடோ நகரம் மிகவும் வன்முறை நிறைந்த பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. போதைப்பொருள் கும்பல்கள் மற்றும் திருடப்பட்ட எரிபொருளை கடத்தும் கும்பல்களால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது.
மெக்சிகோவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த ஆயுதங்களை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

