இலங்கை தலைநகர் கொழும்பில் புதிய அதிபர் ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் போராட்டத்தால் அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா்.
இதனைத் தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தலில், இடைக்கால அதிபரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி. டலஸ் அழகம்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவா் அனுர குமார ஆகிய 3 போ் அதிபர் பதவிக்குப் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் மொத்தம் பதிவான 223 வாக்குகளில் 4 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்றதால் அவர் அதிபராக தேர்தெடுக்கப்பட்டார்.
கோத்தபய ராஜபட்சவின் பதவிக்காலமான நவம்பர் 2024 வரை ரணில் அதிபராக தொடர்ந்து செயல்படுவார்.இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை முன் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.