
மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம் அந்த குழந்தைகள் உட்கொண்ட இருமல் மருந்து தான் இந்த உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக இதன் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கூறும் போது, “குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவில் தயாரான நச்சுத்தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என அறியப்படுகிறது. இந்த குறிப்பிட்ட 4 மருந்துகளால் அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம்” என கருதப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று கூறினார்.
அரியானாவை சேர்ந்த மெய்டன் என்ற மருந்து நிறுவனம் சளி மற்றும் இருமலுக்காக புரோ மெத்சைன், முகா பெல்ஸ்மாலின் மகாப் மேக்தின் என்ற 4 மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த மருந்தில் டயத்லைன் கிளை கோசில் மற்றும் எதிலன் கிளைகோசில் மூலப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பது குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது காம்பியாவை போல வேறு சில நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது. குழந்தைகள் இறந்ததற்கு இந்திய நிறுவன தயாரிப்பான இருமல் மருந்துக்கு தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளதை தொடர்ந்து மத்திய அரசு இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
