
பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று கொண்டார். பிறகு அவர் நிருபர்களிடம், தவறுகளை சரி செய்து பொருளாதாரத்தை உயர்த்துவதே எனது இலக்கு எனக்கூறினார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும்பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும். இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமரானார். ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின.
இதனால், 45 நாட்கள்பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக ரிஷி சுனக் அறிவித்தார். அவரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்த போரிஸ் ஜான்சன் பின் வாங்கினார். மற்றொருவர் பென்னி மோர்டார்ட்க்கு போதிய ஆதரவு இல்லை. இதனால், போட்டியின்றி ரிஷி சுனக் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால், அவர் பிரிட்டனின் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டது.இந்நிலையில், ரிஷி சுனக் மன்னர் சார்லசை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்கும்படி சார்லஸ் கேட்டு கொண்டார். இதனையடுத்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்று கொண்டார்.
இதன் பிறகு நிருபர்களிடம் ரிஷி சுனக் கூறுகையில், எனது பணி உடனடியாக துவங்குகிறது. கடினமான முடிவுகள் வர உள்ளன. இரவு பகல் பாராமல் உழைப்பேன். எனது நடவடிக்கைகள் மூலம் நாட்டை ஒருங்கிணைப்பேன். எனது பணி மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவேன். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்.
பிரதமர் பதவிக்கான பொறுப்பு கடமைகளை உணர்ந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் கோட்பாடுககளை நிறைவேற்றுவேன். பிரிட்டனின் பொருளாதாரத்தை உயர்த்துவது தான் எனது இலக்கு. குழப்பங்களுக்கு மத்தியில் நான் பேசுவதை விட செயல் பேசப்படும். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த லிஸ் டிரஸ் விரும்பியதில் தவறில்லை.இது ஒரு உன்னதமான நோக்கம். மாற்றத்தை உருவாக்குவதற்கான அவரது முயற்சியை நான் பாராட்டினேன். ஆனால், சில தவறுகள் நிகழ்ந்தன. தவறுகள் இருந்தாலும் அதில் கெட்ட எண்ணங்கள் இல்லை. பிரெக்சிட் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்தும் பொருளாதாரத்தை எனது அரசாங்கம் உருவாக்கும்.
ஒவ்வொரு மட்டத்திலும் ஒருமைப்பாடு, தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் பற்றியதாக அரசு இருக்கும். மக்களின் நம்பிக்கையை பெறுவேன். சிறந்த எதிர்காலத்திற்கு நமது நாட்டை வழிநடத்தி செல்லவும், அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்கள் தேவைகளை முன்வைக்கவும், கட்சியின் மிகச்சிறந்த மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை உருவாக்கவும் தயாராக உள்ளேன். ஒன்றாக நம் நம்ப முடியாத விஷயங்களை அடைய முடியும்.
பலர் செய்த தியாகங்களுக்கு தகுதியான எதிர்காலத்தை உருவாக்குவோம். நாளையும், அதன் பின் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுன் நிரப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
