நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளது. துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தின்போது துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின. 1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு திரும்பிய திசையெல்லாம் கட்டிடக்குவியலாக காட்சி அளிக்கிறது. மலைபோல் குவிந்துகிடக்கும் கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்க ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் மீட்புப் பணிகளுடன் இணைந்து வெறும் கைகளிலேயே இடிபாடுகளை அகற்றி அதனுள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
துருக்கியில் இடிந்த கட்டிடங்களில் ஆஸ்பத்திரிகளும் அடங்கும். அதனால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி நிலநடுக்கம் பாதித்த இடங்களில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருவது மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 4,000-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு பணிகளுக்கான என்டிஆர்எப் குழுவுடன் இந்திய விமான படையின் சி17 குளோப் மாஸ்டர் விமானம்.துருக்கி நாட்டை சென்றடைந்துள்ளது.