
தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ஆக பதிவாகியுள்ளது.
மிண்டனாவ் தீவில் தாவோ டி ஓரோ மாகாணம் அருகே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதால், சேதம் குறித்து உடனடியாக உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி, சிரியாவில் பெரும் நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. துருக்கி, சிரியாவை உருக்குலைத்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50,000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்தனர். இரு நாடுகளின் நிலநடுக்கத்தால் பல லட்சக்கணக்கானோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகள் தொடர்ந்து நில நடுக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அதிக நிலநடுக்கங்களை எதிர்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் கூறுகையில், சான் மரியானோவிலிருந்து தென்கிழக்கில் 4 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்றார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், வடக்கு பிலிப்பைன்ஸில் டோலோரஸ் அருகே 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.