பாகிஸ்தான் ஏஜென்சிகள் என்னை சித்திரவதை செய்தனர், ஆனால் ஸ்ரீ கிருஷ்ணர் என் கையைப் பிடித்தார்’ என்று, சமூக ஊடக செல்வாக்கு மிக்க முகமது ஷயான் அலி என்பவர், கர்வாப்ஸி எனும் தாய்மதம் திரும்புதலை டிவிட்டரில் அறிவித்து ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சனாதன தர்மத்திற்குத் திரும்பிய பாகிஸ்தானியர் முஹம்மத் ஷாயன் அலி – பிறப்பால் பாகிஸ்தானி, மனத்தால் பாரத்வாசி, விதி வசத்தால் அமெரிக்க வாசி (லாஸ்சேஞ்சல்ஸ்)!
இவருடைய முன்னோர்கள் பாரதத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. போன்றவை இவர் மீது சந்தேகம் கொண்டு (ரா & யஹுதி ஏஜெண்ட் என்று சந்தேகம்) விசாரணை என்ற பெயரில் பெரிய அளவில் சித்திரவதை செய்ததால் அந்நாட்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.
பாகிஸ்தான் உளவத்துறையின் சித்திரவதையால் மனமொடிந்து விரக்தியில் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளலாம் என்று இருந்த போது, ஶ்ரீ கிருஷ்ணர் என் கரம் பிடித்து எனக்கு நம்பிக்கை அளித்தார் என்கிறார் முஹம்மத் ஷாயன் அலி. என்னைக் கைவிட்டுவிடாத இஸ்கான் அமைப்புக்கும் நன்றி என்று அவர் தெரிவிக்கிறார்.
அவரது டிவிட்டர் பதிவு….
கடந்த 2 வருடங்களாக எனது முன்னோர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை கவனித்த பிறகு, இன்று எனது “கர் வாப்சி”யை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.
என்னை ஒருபோதும் கைவிடாத இஸ்கானுக்கு நன்றி
பாகிஸ்தான் ஏஜென்சிகளின் சித்ரவதையால் 2019-ல் பாகிஸ்தானை விட்டு வெளியேற நேரிட்ட பிறகு, மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். ஆனால் ‘கிருஷ்ணர்’ என் கையைப் பிடித்தார். இப்போது அதைத் திருப்பிக் கொடுத்து என் முன்னோர்களைப் பெருமைப்படுத்த வேண்டிய நேரம் இது.
நான் மிக விரைவில் எனது தாயகத்திற்குச் செல்வேன். எனது தாத்தா பாட்டி மற்றும் எனது முன்னோர்கள் அனைவரும் பிறந்து வளர்ந்த, எனது சொந்த “மண்” மற்றும் “மக்கள்” ஆகியவற்றில் என்னை இணைத்துக் கொள்வேன், ஏனெனில், இறுதியில்:
“வீடு என்றால் அது வீடு தான்”
ஒரு சனாதனியாக, நான் வேறு எந்த மதத்தின் மீதும் வெறுப்புணர்ச்சியில் ஈடுபடமாட்டேன் என்பதை மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கைகளை நான் மதிக்கிறேன், நீங்கள் என்னுடையதை மதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு நபரும் எந்த மதமாக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும் என்று என் கீதை எனக்குக் கற்பிக்கிறது!
இந்தச் சிறப்பு நாளில், என் வாழ்நாளில் யாரையாவது வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ காயப்படுத்தியிருந்தால், நான் அவர்களிடம் மன்னிப்பு கோர விரும்புகிறேன். ஏனென்றால் மக்களை காயப்படுத்துவதன் மூலம் என் வாழ்க்கையில் இந்த அழகான பயணத்தை தொடங்க விரும்பவில்லை.
இன்று, என் வேர்களுக்குத் திரும்பி வந்ததற்காக என்னைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் என் முன்னோர்களும் அதையே உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்
உங்கள் அனைவருக்கும் என் அன்பை அளிக்கிறேன்
ஹரே கிருஷ்ணா