வடக்கு சீனாவில் குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்கள் கொத்துக் கொத்தாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளிடம் சுவாச நோய்களின் அதிகரிப்பு மற்றும் நிமோனியாவின் கொத்துகள் பற்றிய விரிவான தகவல்களை, உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிடம் அதிகாரப்பூர்வ தகவல் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.
13 நவம்பர் 2023 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தேசிய சுகாதார ஆணையத்தைச் சேர்ந்த சீன அதிகாரிகள், சீனாவில் சுவாச நோய்களின் நிகழ்வுகள் அதிகரிப்பது குறித்து செய்தி வெளியிட்டனர்.
கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கியது, இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா (பொதுவாக இளம் குழந்தைகளை பாதிக்கும் ஒரு பொதுவான பாக்டீரியா தொற்று), சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் SARS-CoV-2 (COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) போன்ற அறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சுழற்சி காரணமாக இந்த சுவாச நோய்கள் அதிகரித்ததாக அதிகாரிகள் கூறினர். சுகாதார வசதிகள், சமூக அமைப்புகளில் மேம்படுத்தப்பட்ட நோய் கண்காணிப்பு, நோயாளிகளை நிர்வகிக்கும் சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்த வேண்டியது இவற்றின் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
நவ.21 அன்று, வட சீனாவில் குழந்தைகளிடம், ‘இனம் கண்டறியப்படாத’ நிமோனியாவின் கொத்துகள் இருப்பதாக ஊடகங்களும் ProMED அறிக்கைகளும் தெரிவித்தன. சீன அதிகாரிகளால் முன்னர் அறிவிக்கப்பட்ட சுவாச நோய்த்தொற்றுகளின் ஒட்டுமொத்த அதிகரிப்பு அல்லது தனி நிகழ்வுகளுடன் இவை தொடர்புடையதா என்பது குறித்த தெளிவாக தகவல்கள் இல்லை.
நவ.22 அன்று, உலக சுகாதார அமைப்பு (WHO), குழந்தைகளிடம் காணப்பட்ட சுவாச நோய்கள் குறித்த கூடுதல் தொற்றுநோயியல் மற்றும் மருத்துவத் தகவல்களையும், ஆய்வக முடிவுகளையும், சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் மூலம் கோரியது.
இன்ஃப்ளூயன்ஸா, SARS-CoV-2, RSV மற்றும் மைக்கோபிளாஸ்மா நிமோனியா உள்ளிட்ட, கண்டறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சமீபத்திய பரவல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளின் தற்போதைய சுமை இவை குறித்த கூடுதல் தகவல்களையும் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.
சீனாவில் தற்போதைய தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் மருத்துவ நெட்வொர்க்குகள் மூலம், சீனாவின் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் உலக சுகாதார அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது.
அக்டோபர் மத்தியில் இருந்து, வடக்கு சீனாவில், முந்தைய மூன்று ஆண்டுகளின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் அதிகரித்து வருவது பெரிதாகப் பதிவாகியுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா, காய்ச்சல் போன்ற நோய்கள், RSV மற்றும் SARS-CoV-2 ஆகியவற்றின் போக்குகள் குறித்த தகவல்களைப் பதிவுசெய்யும் அமைப்புகளையும், உலகளவிலான இன்ஃப்ளூயன்ஸா கண்காணிப்பு மற்றும் பதிலளிக்கும் தகவல் தளங்களையும் சீனா கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே, உலக சுகாதார அமைப்பு இந்தக் கூடுதல் தகவலைக் கேட்டுப் பெற்று, சீனாவில் சுவாச நோய் அபாயத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்குமென்று அது கூறுகிறது. இதில் WHO பரிந்துரைத்த தடுப்பூசியும் அடங்கும்; நோய் வாய்ப்பட்டவர்களிடமிருந்து விலகி, தொலைவில் வைத்திருத்தல்; உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது வீட்டில் இருப்பது; பரிசோதனை மற்றும் தேவையான மருத்துவ பராமரிப்பு; பொருத்தமான முகக் கவசங்களை அணிவது; நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்தல்; மற்றும் வழக்கமான கை கழுவுதல் நடவடிக்கை இவற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.