இந்தியாவால் தேடப்படும் மற்றொரு தீவிரவாதி பாகிஸ்தானில் கொல்லப்பட்டான். 2015 ஆம் ஆண்டு காஷ்மீரின் உதம்பூர் BSF கான்வாய் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதி ஹன்ஸ்லா அட்னான் பாகிஸ்தானின் கராச்சியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டான்.
காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிஎஸ்எப் (எல்லை பாதுகாப்பு படை) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவன் இவன் என்பதும், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சையீத்தின் உறவினன் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கடந்த 2015ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிஎஸ்எப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர். பயங்கரவாத தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு ஹன்சியா அத்னன் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்தது.
மேலும் 2016 ல் பாம்போர் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு ஹன்சியாவுக்கு தொடர்பு உள்ளது தெரிந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் லஷ்கர் பயங்கரவாத முகாமிற்கு சென்ற இவன், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை தேர்வு செய்தும் வந்துள்ளான்.
இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யவும் ஹன்சியாவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் அந்நாட்டு ராணுவம் ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், கராச்சியில் உள்ள அவனது வீட்டில் கடந்த 2 மற்றும் 3ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் மர்ம நபர்களால் ஹன்சியா அத்னன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.
அவனது உடலில் 4 குண்டுகள் பாய்ந்தன. அதில் படுகாயமடைந்த பயங்கரவாதியை ராணுவத்தினர் ரகசியமாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.