மாலத்தீவு நோக்கிச் சென்ற சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசிய கடலோரக் காவல்படையினரால் நிறுத்தப்பட்டது. இந்தோனேசிய கடலோர காவல்படை சீனாவின் “சியாங் யாங் ஹாங் 03” கப்பலை அதன் டிரான்ஸ்பாண்டரை மூன்று முறை அணைத்த பிறகு, சிவப்புக் கொடிகளை உயர்த்தி நிறுத்தியது.
இந்தக் கப்பல், இலங்கை வழியாக அடுத்த வாரத்தில் மாலத்தீவை நோக்கி நகரும் என்று கூறப்படுகிறது. எனினும், ஆராய்ச்சிக் கப்பல் என்ற பெயரில் இந்தியக் கடல் பகுதியில் சுற்றும் சீன உளவுக் கப்பல் குறித்து இந்தியா தனது அச்சத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது இந்தியப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்பதை இந்தியத் தரப்பு வெளிப்படுத்தி வருகிறது.
இதனிடையே, இந்தோனேசிய கடலோர காவல்படை (ஐசிஜி) அதன் தானியங்கி தகவல் அமைப்பை முடக்கியதால், மாலத்தீவுக்குச் செல்லும் சீன ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்தியதாக மாலத்தீவைச் சேர்ந்த ’அதாது’ ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி 8 மற்றும் 12 க்கு இடையில் கப்பல், நாட்டின் கடல் வழியாக பயணிக்கும்போது, டிரான்ஸ்பாண்டரை மூன்று முறை அணைத்ததை அடுத்து இந்தோனேசிய அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்ததாக செய்திகள் வெளியாகின.
சீன அரசுக் கப்பலான “சியாங் யாங் ஹாங் 03” ஜனவரி 11 ஆம் தேதி சுந்தா ஜலசந்தி பகுதியில் ஐசிஜியால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அமெரிக்க கடற்படை நிறுவனம் தகவல் வெளியிட்டது. கப்பலில் இருந்த பணியாளர்கள் டிரான்ஸ்பாண்டரை அணைக்க மறுத்ததாகவும், அது தானாக உடைந்து விட்டதால் அணைக்க இயலவில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது..
தானியங்கி அடையாள அமைப்பு டிரான்ஸ்பாண்டர்கள், மற்ற கப்பல்கள் மற்றும் கடலோர அதிகாரிகளுக்கு தானாகவே நிலை, அடையாளம் மற்றும் கப்பலைப் பற்றிய பிற தகவல்களை வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ICG – இந்தோனேஷிய கடலோர காவல்படை, சீனக் கப்பலில் ஏற முயற்சிக்கவில்லை, ஆனால் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தை விட்டு வெளியேறும்படி அது சீன கப்பலைக் கேட்டுக் கொண்டது என்று தி ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச கடல்சார் சட்டத்தின்படி, இந்தோனேசிய கடற்பகுதியில் உள்ள தீவுக்கூட்ட கடல் பாதைகளில் செல்லும் அனைத்து கப்பல்களும் இயங்கிக் கொண்டிருக்கும் டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
கடல் போக்குவரத்தை கண்காணிக்கும் தளங்கள் ஜனவரி 22 அன்று ஜாவா கடலில் கப்பலின் இருப்பிடத்தைக் காட்டியதாகவும், அதன் தற்போதைய இடம் தெரியவில்லை என்றும் மாலத்தீவின் ‘அதாது’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) ஒரு கட்டுரையை வெளியிட்டது: அந்தக் கட்டுரையின் தலைப்பு, “இந்தியப் பெருங்கடலில் சீனாவின் இரட்டை பயன்பாட்டு ஆராய்ச்சி செயல்பாடுகள் – என்பதாக இருந்தது. இது,. PLA நிறுவல்களுக்கு அருகில் இந்தக் கப்பல் சில மணி நேரங்கள் அல்லது நாட்களுக்கு இருளாக இருக்கும்’ என்று அது குறிப்பிட்டது.
“கடலின் இயல்பு நிலையில், அவை சிவப்புக் கொடிகளை உயர்த்தலாம். “ஏமாற்றுதல்” (தவறான அடையாளத் தகவலை வழங்குதல்) அல்லது “இருட்டாகப் போவது” (நீடித்த காலத்திற்கு தானியங்கு அடையாள அமைப்பு சிக்னல்களை முடக்குதல்) ஆகியவை முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
ஜனவரி 22 அன்று, மாலத்தீவு ஜனாதிபதி மொஹமத் முய்ஸு சீனாவிலிருந்து திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் – XIANG YANG HONG 03 – மாலே நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகத் தகவல் வெளியானது. .
இதற்கு ஒரு நாள் கழித்து, மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியது, ஆனால், மாலத்தீவின் அதிகார பூர்வ செய்தியில், சீனக் கப்பல் மாலத்தீவு பிரதேசத்தில் ஆராய்ச்சி நடத்தாது என்று கூறியது. எனினும், இந்தியாவின் புவிசார் மூலோபாய நிபுணர் பிரம்மா செல்லனே, கப்பல் எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என்ற மாலேயின் கூற்று “நகைப்புக்கு உரியது” என்று குறிப்பிட்டார்.
“பிஎல்ஏ-இணைக்கப்பட்ட கப்பல் மாலத்தீவு கடற்பகுதியில் கடல்சார் ஆராய்ச்சியை மேற்கொள்ளாது என்று முய்ஸு அரசு கூறுவது நகைப்புக்குரியதுதான்! ஏனெனில் மாலத்தீவுகள் அத்தகைய செயல்பாட்டைக் கண்டறியும் திறனைக் கொண்டிருக்கவில்லை” என்று புவிசார் மூலோபாய நிபுணர் கூறினார்.
இந்தியக் கடல் படுகையில் இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த செயல்பாடுகளை அறிவதற்கும், இந்தியப் பெருங்கடல் படுக்கையை துல்லியமாக படமெடுப்பதிலும், நில அதிர்வு மற்றும் புவியல் அளவீட்டுத் தரவுகளைச் சேகரிப்பதிலும் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செல்லனே கூறினார். “மாலத்தீவுகள், அதன் புதிய இஸ்லாமிய-சார்பு, சீனா சார்பு அதிபரின் கீழ், ஒரு அடிவருடியாக மாறி வருகிறது,” என்றார் அவர்.
முன்னதாக, கப்பல் கண்காணிப்பு இணையத்தளமான MarineTraffic இன் படி, சீனாவின் Xiang Yang Hong 3, துறைமுக நுழைவை இலங்கை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது, இது பிப்ரவரி மாத தொடக்கத்தில் மாலத்தீவுக்கு வரவுள்ளது.
இந்தியாவின் ஊடக அறிக்கைகள் தொடர்ந்து சீனா தனது கப்பலை “உளவுக்கு” பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், மாலத்தீவு கடற்பகுதியில் கப்பல் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளாது, என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறியது. இந்தக் கப்பல் “துறைமுக சீரமைப்பு அழைப்புக்காகவும், பணியாளர்களின் சுழற்சி மற்றும் பணியமர்த்தலுக்காகவும்” மட்டுமே நிறுத்தப்படும் என்று மாலத்தீவு அரசு கூறியது. ஆனால், சீனாவில் இருந்து உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
எனினும், இந்தியப் பெருங்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் நடமாட்டம் மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு ஆகியவை குறித்து இந்தியா சந்தேகம் தெரிவித்து வருகிறது.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் சீன சார்பு அதிபர் முகமது முய்சு வெற்றி பெற்றதில் இருந்தே, மாலே மற்றும் புது தில்லி இடையேயான உறவுகள் சரிந்துள்ளன. மூன்று உளவு விமானங்களை இயக்குவதற்காக மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ள 89 பாதுகாப்புப் பணியாளர்களை மார்ச் 15 ஆம் தேதிக்குள் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று முய்ஸு கேட்டுக் கொண்டார். இருப்பினும், இந்தியப் படைகளுக்குப் பதிலாக சீனப் படைகளை மாற்றுவதன் மூலம், புதுதில்லியுடன் உறவுகளை மேம்படுத்த தான் விரும்பவில்லை என்பதை முய்ஸு தெரிவித்துள்ளார்.
முய்ஸுவின் மூன்று அமைச்சர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை “கோமாளி” மற்றும் “பயங்கரவாதி” என்று கூறியதையடுத்து புதுதில்லியுடன் மாலத்தீவுக்கு மோதல் வெடித்தது. இதை அடுத்து, பாலிவுட் நடிகர்கள் மற்றும் இந்தியாவின் சில கிரிக்கெட் ஜாம்பவான்கள், தங்கள் தெற்கு அண்டை நாட்டின் – பிரபலமான சுற்றுலாத் தலத்தை – புறக்கணித்து, அதற்குப் பதிலாக அடுத்த விடுமுறையை நம் நாட்டின் அருகில் அந்தமானில் கழிக்குமாறும் நட்பு அழைப்பு விடுத்தனர். இதை அடுத்து இந்தியர்கள் மாலத்தீவின் சுற்றுலாவைப் புறக்கணிக்கத் தொடங்கினர்.
மாலத்தீவுகள் சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்காக இந்தியாவையே நம்பியிருக்கிறது. இதைக் குறைப்போம் என்று முய்ஸு கூறினார். இதன் பின், வெளிநாட்டில் அரசாங்கத்தால் செலுத்தப்படும் சுகாதார சிகிச்சை தேவைப்படும் குடிமக்கள் செல்லக்கூடிய பட்டியலில் மேலும் பல நாடுகளைச் சேர்த்தார்.
இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டிலிருந்து இதேபோன்ற இரண்டு சீனக் கப்பல்கள் வருவதற்கு, இந்தியாவிடம் இருந்து ஆட்சேபனைகள் எழுந்த நிலையில், Xiang Yang Hong 3 கப்பல் தனது துறைமுகங்களுக்கு வர அனுமதிக்கப்படாது என்று இலங்கை சீனாவிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
சீனக் கப்பலான ஷி யான் 6, கொழும்பில் துறைமுக நுழைவுக்கு அக்டோபரில் அனுமதி அளிக்கப்பட்டது, பின்னர் இலங்கை அதிகாரிகள் சீனாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து கடல் ஆராய்ச்சியை மேற்கொள்ள 48 மணி நேர அவகாசம் அளித்தனர்.
மற்றொரு சீனக் கப்பலான யுவான் வாங் 5, விண்கல கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்றது என்று கூறப்பட்டது. ஆனால், இந்தியா இதை உளவுக் கப்பல் என்று கூறியது. இந்நிலையில் இது 2022 இல் இலங்கைக்கு வந்தது. முன்னதாக, ஒரு ஜோடி சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் 2014 இல் இலங்கையில் நிறுத்தப்பட்டன. இது இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்பை எதிர்கொண்ட பின் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கை தனது துறைமுகங்களுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
இப்படி கப்பலை வைத்து சர்வதேச சீன சார்பு அரசியலை மாலத்தீவுகள் எடுத்துக்கொண்டிருக்க, அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் அதன் எதிரிடை அரசியலை கைக்கொண்டனர். இந்திய பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார். எல்லா வகையிலும் மாலத்தீவுக்கு உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முகமது முய்சு கொண்டிருப்பதற்கு, அவர் மீது முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன!
இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களுக்கு முன் அந்நாட்டு பார்லிமெண்ட் சிறப்புக் கூட்டத்தில் ஆளும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி எம்.பி.,க்களுக்கும் இடையே அடிதடி நடந்தது. இந்தக் கைகலப்பு வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதன் எதிரொலியாக அதிபர் முகமது முய்சுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் மாலத்தீவின் பிரதான எதிர்கட்சியான எம்.டி.பி., எனப்படும் மாலத்தீவு ஜூம்ஹூரி கட்சி தலைவர் குவாசிம் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், அதிபர் முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, பகையை வளர்த்து , இந்திய பிரதமர் மோடியை அவமதித்து விட்டார். இந்தியாவிடமும், இந்திய பிரதமர் மோடியிடம் அதிபர் முகமது முய்சு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சீனாவின் சதிவலையில் சிக்கிக்கொண்டு, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் தற்போது தவித்து வருவது உலக அரங்கில் பரிதாபமாகவே பார்க்கப்படுகிறது.