- Ads -
Home உலகம் உலகின் கவனம் பெற்ற பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்!

உலகின் கவனம் பெற்ற பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம்!

அமைதி திரும்புவதற்கு, இரு நாட்டுத் தலைவர்களும் முன்வந்தால், அதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்பதை தீர்க்கமாக குறிப்பிட்டார்.

#image_title
#image_title

இன்று உலகில் கவனத்தை ஈர்த்திருக்கும் விஷயம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம்தான்! போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு அவர் மேற்கொண்ட பயணம், இன்று உலக நாடுகளால் உன்னிப்பாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வெளிநாடு சென்று வருவது குறிப்பிடப் பட வேண்டிய விஷயமல்ல என்றாலும், மிக மிக உக்கிரமான போர்ப் பதற்றமான சூழலில், தனது பாதுகாப்பையும் கருத்திற்கொள்ளாமல், அந்நாட்டின் நலனை நாடி அவர் உக்ரைன் செல்வதுதான் முக்கியமான விஷயம்!

சோவியத் யூனியன் பிளவுபட்டபோது, அதில் இருந்து பல நாடுகள் உருவாகின. அதில் மிகப் பெரும் பகுதி ரஷ்யா என்று மாறியது. இதைத் தவிர பல நாடுகளும் உருவாகின. இவ்வாறு ரஷ்யாவை ஒட்டியுள்ள பகுதி, உக்ரைனாக மாறியது.

கடந்த 1991, அக்., 24ல் அந்த நாடு சுதந்திரம் பெற்றது. ஆனாலும், அதை தன்னுடன் இணைப்பதற்கு ரஷ்யா தீவிரமாக முயற்சி மேற்கொண்டது. இதன்படி, 2014ல் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அப்போது, உக்ரைனின் கிரீமியா உள்ளிட்ட சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. டான்பாஸ் போர் என்று அழைக்கப்படும் இந்தப் போர், 2022 வரை அடிக்கடி மோதல்களாகவே இருந்து வந்தது. ஆனால், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா தீவிர போரைத் தொடங்கியது; அது தற்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளாக உக்கிரமான போர் நடக்கும் உக்ரைனில், ரஷ்யா உள்புகுந்த நிலையில், தற்போது ஒரு திருப்பமாக, ரஷ்யாவுக்குள் உக்ரைன் புகுந்துள்ளது. இப்போது ரஷ்யாவிடம் உக்ரைனின் அணு உலை ஒன்றும், உக்ரைனிடம் ரஷ்ய அணு உலை ஒன்றுமாக சிக்கி, சர்வதேச அணுசக்தி கமிஷன் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறது. இதனால், நிலைமை மோசமாகித்தான் போயிருக்கிறது. ரஷ்ய அதிபர் புடினுக்கும் வேறுவழி தெரியவில்லை! உக்ரைன் ரஷ்யாவை விட்டு விலகினால் ரஷ்யா உக்ரைனில் இருந்து வெளியேறும் என்றவாறு உலக நாடுகள் கணிக்கின்றன.

இருப்பினும் இன்றைய நிலையில், உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளுமே தங்களுக்கான நம்பகத்தன்மை வாய்ந்த நபர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நடுவுநிலையுடன் வரவேண்டும் என்று எதிர்பார்த்திருக்கின்றன. இந்த நடுவுநிலை வகித்தல், சமாதானம் பேசுதல் ஆகியவற்றில் சீனா எப்போதுமே உள்வரும். ஆனால், இந்த முறை உக்ரைனுக்கு அமெரிக்காவும் மேற்கு உலக நாடுகளும் அணி சேர்ந்துவிட்டதால், ரஷ்யாவிடம் சீனா, கொரியா உள்ளிட்ட கம்யூனிஸ நாடுகள் கைகோத்துவிட்டதால், இரு தரப்பிலுமே இந்த நாடுகளை சமாதானம் பேச நாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ALSO READ:  கோயில்களுக்கு அருகே இறைச்சிக் கடைகள்; அகற்ற நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை!

இந்த நிலையில், உலக நாடுகளின் கவனம் எல்லாம், பாரதப் பிரதமர் மோடியின் மீதே குவிந்திருக்கின்றன. காரணம், பிரதமர் மோடி எவர் பக்கத்திலும் நின்று ஆதரவு கொடுக்காவிட்டாலும், இரு தரப்புக்கும் சமூக பொருளாதார, மருத்துவ உதவிகளைச் செய்து தன்னை நம்பிக்கைக்கு உரியவராக்கிக் கொண்டிருக்கிறார்.

இப்போது, மோடி உலக அரங்கில் மிக மிக வலுவானவரும் மதிக்கப் படுபவருமான தலைவராக உருவாகியிருக்கிறார். அவர் சொல்லுக்கு பெரும் மதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவால் தவிர்க்க முடியாத நாடு இந்தியா. புடின் புன்னகையுடன் ஆரத் தழுவ விரும்பும் ஒரே தலைவர் மோடி எனும் வகையில் ரஷ்யாவும் மோடியின் மத்தியஸ்தத்தை விரும்பியே நிற்கிறது. உக்ரைனைப் பொறுத்தவரை அதன் தேர்வும் இந்தியாவாகவே உள்ளது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டுக்கும் அந்த சக்தியும், சந்தர்ப்பமும் இல்லை என்பதையும் அந்த நாடு உணர்ந்திருக்கின்றது!

கடந்த வருடம் முதலே இந்தியா தங்களுக்கு இடையிலான போரில் மத்தியஸ்தம் செய்யவேண்டும் என உக்ரைன் கேட்டுக்கொண்டது. உக்ரைனின் குரலை மேலும் பல நாடுகள் எதிரொலித்தன. இந்த நிலையில்தான் கடந்த மாதம் ரஷ்யா சென்றுவந்தார் மோடி. உலக நாடுகள் எதிர்பார்க்காத திடீர் பயணம் அது. அவ்வகையில் புடினிடம் அவர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அவர் நேற்று உக்ரைன் பயணம் மேற்கொண்டார். முதலில் போலந்து சென்றுவிட்டு, அங்கிருந்து உக்ரைன் சென்று செலன்ஸ்கியினை சந்தித்துப் பேசினார்.

அவ்வகையில் உக்ரைனுக்குச் சென்ற முதல் சமாதானத் தலைவர் மோடி என்பதுதான் இன்றைய செய்தி! அது நாளைய வரலாறு! ஓர் இந்தியத் தலைவன் உலக அரங்கில் நடக்கும் போரில் சமாதானம் பேசச் செல்வதும் உலக வரலாற்றில் இதுதான் முதல்முறை!

சமாதானம் பேசுவது என்பது எளிதில் நடக்காதுதான்! சமாதானம் பேசச் செல்பவன் சண்டையிடும் இருவரை விட பலம் கொண்டவனாக, இருவரையும் அடக்கும் சக்தி கொண்டவனாக இருக்க வேண்டும். பலவானே இரு தரப்புக்கு இடையே சமாதானம் செய்துவைக்க முடியும்! அந்த வகையில் பாரதம் முழு பலத்தோடு இன்று உலக அரங்கில் தனிப்பெரும் சக்தியாக எழுந்து நிற்கிறது! மோடியின் உக்ரைன் பயணம் அதை அறுதியிட்டுச் சொல்கிறது.

இத்தகைய சூழலில், வரலாற்றின் ஒரு பக்கத்தை நாம் திருப்பிப் பார்க்க வேண்டியுள்ளது. 1965ல் உக்ரைனும் ரஷ்யாவும் சோவியத் என ஒன்றாக இருந்த போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் இந்தியப் படைகள் லாகூரைக் கடந்து இஸ்லாமாபாத்தைக் கைபற்ற நெருங்கின‌. அதில், பாகிஸ்தானை முறியடித்து காஷ்மீரை முழுதாய்க் கைப்பற்றி கிழக்கு பாகிஸ்தானை உடைக்கும் திட்டமும் லால் பகதூர் சாஸ்திரிக்கு இருந்துள்ளது. ஆனால் சோவியத் யூனியன் அதை விரும்பவில்லை. காரணம் அது சீன நலனை விரும்பியது. சாஸ்திரியின் செயலால் சீனா பாதிக்கப்படும் என்று கருதியது. அதனால் சாஸ்திரி சோவியத்துக்கு அழைக்கப்பட்டார். பேச்சுவார்த்தைக்காகச் சென்ற அவர், தாஷ்கண்ட் நகரில் மர்மமாக இறந்தார். அப்போது சோவியத் அதிபராக இருந்த கோசிஜின் சாஸ்திரியின் மரணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை!

ALSO READ:  அந்த 8 பெட்டி வந்தே பாரத் ரயிலை ‘இங்கே’ இயக்கலாமே!

அப்படி நம் நாட்டின் பிரதமர் சாஸ்திரி மர்மமாக மரணிக்க, இந்தியாவைப் பெரும் குழப்பத்தில் தள்ளியது ரஷ்யா!

இப்போது காலம் மாறியிருக்கிறது. அதே ரஷ்யாவின் சிக்கலைத் தீர்க்க, இந்தியா சமாதானத் தூது செல்ல வேண்டியிருக்கிறது. தர்மசக்கரம் சுழல்கின்றது! உக்ரைனும் ரஷ்யாவும் தங்களுக்குள் மோதிக் கொள்ள பாரதம் சமாதானம் செய்யத் தயார் என்கிறது! பாரதம் தர்மமும் அறமும் கொண்ட தேசம். பாரதத்தின் சநாதன தர்மம் தன் இனம், தன் மதம், தன் நாடு , தன் மொழி எனக் குறுகியது அல்ல! அது வானம் போல கடல் போல விரிவானது! “வசுதைவ குடும்பம், லோகா சமஸ்தாஸ் சுகினோ பவந்து, சர்வே ஜனா சுகினோ பவந்து என்பவை எல்லாம் சனாதனத்தின் அடிப்படைக் கருத்துகள். இப்படி, எல்லா உலக மக்களும் நன்றாக இருக்க‌ட்டும, எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும், உலகம் வாசுதேவனாகிய இறைவனின் ஒரே குடும்பம் என்ற சிந்தையில் செயல்படும் சனாதனத்தின் வழிவந்த பிரதமர் மோடியால் இதனை சாதிக்க முடியும் என்பதால் தான், அவரை உலக நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வருமாறு விரும்பி அழைக்கின்றன.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, எண்ணெய், அணு மின்சக்தி, ராணுவம் உட்பட பல துறைகளில் மிக நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. கொரோனா தொற்றின்போது, வளைகுடா நாடுகளை மட்டுமே எண்ணெய் தேவைக்காக சார்ந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்நேரம், உக்ரைனுடனான போர் தீவிரமடைந்த நிலையில், ரஷ்யா பல சலுகைகளுடன் எண்ணெய் விற்பனைக்கு முன்வந்தது. இதை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. இதனால், ரஷ்யாவுக்கு ஆதரவும் தெரிவிக்காமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்த அதே நேரத்தில், போரை நிறுத்தி, அமைதிக்கான பேச்சைத் துவங்கும்படி, இரு நாடுகளுக்கும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த ஜூலை மாதம், ரஷ்யாவுக்குச் சென்றபோதும், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் மோடி இதை வலியுறுத்தினார்.

ALSO READ:  Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில், சமரசம் செய்ய இந்தியாவால் மட்டுமே முடியும் என, பல நாடுகள் கூறின. ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் சமநிலையில் நட்பு வைத்துள்ளதால், இந்தியா மீது அந்த நாடுகள் நம்பிக்கை தெரிவித்தன. 

முதலில், ஐரோப்பிய நாடான போலந்துக்குச் சென்ற அவர், அங்கிருந்து, 10 மணி நேர ரயில் பயணம் செய்து, உக்ரைனின் கீவ் நகரை நேற்று காலை சென்றடைந்தார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். கட்டித் தழுவி அவரை ஜெலன்ஸ்கி வரவேற்றார். உணர்ச்சி பெருக்கில் இருந்த ஜெலன்ஸ்கியின் தோளில் கைகளை போட்டு, பிரதமர் மோடி தேற்றினார். தொடர்ந்து, இருவரும், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து பேசினர். குறிப்பாக இந்தப் பேச்சில், ரஷ்யா போர் குறித்தே அதிக நேரம் பேசப்பட்டது. 

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை, வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை என்பதை மோடி சுட்டிக் காட்டினார். அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது என்று குறிப்பிட்டார். போர்க்களத்தில் தீர்வு காண முடியாது என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

தூதரக பேச்சு மற்றும் அமைதி பேச்சின் வாயிலாகவே, பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்திய அவர், இரு நாடுகளும் இதற்கு முன் வர வேண்டும் என்பதை முன்மொழிந்தார். போரால், இளம் குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் துர்பார்க்கியம் என்பதை ரஷ்யா, உக்ரைன் தலைவர்களுக்கு கோடிட்டு காட்டினார்.

அமைதி திரும்புவதற்கு, இரு நாட்டுத் தலைவர்களும் முன்வந்தால், அதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்பதை தீர்க்கமாக குறிப்பிட்டார். பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இந்தியா வரும்படி பிரதமர் அழைப்பு விடுத்தார்.

ஜெலன்ஸ்கியுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு, மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், தீர்வை நோக்கியதாகவும் இருந்தது என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். புடினுடனான தன் சமீபத்தில் சந்திப்பின்போது பேசிய விபரங்களையும் ஜெலன்ஸ்கியுடன் மோடி பகிர்ந்து கொண்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version