அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், டொனால்டு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி, பெரும்பான்மைக்கு தேவையான 270 இடங்களைக் கடந்து 277 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 226 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதை அடுத்து, அமெரிக்காவின் 47வது அதிபராக ஒரு இடைவெளியில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30க்கு தொங்கியது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78), ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்(60) உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், இன்டியானா, கென்டக்கி, அலபாமா, மிஸ்ஸிசிபி, புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். தொடர்ந்து டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையைக் கடந்தார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஆளும் தரப்பின் கமலா ஹாரிஸ், வெர்மான்ட், மாசசூசெட்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட் உள்ளிட்ட மாகாணங்களி்ல், 226 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பின்தங்கினார்.
அதிபர் தேர்தலுடன் அமெரிக்க செனட் சபைக்கான தேர்தலும் நடந்தது. இதில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இதில் டிரம்பின் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள், பெரும்பான்மைக்கு தேவையான 51 இடங்களில் வெற்றி பெற்றனர். ஜனநாயகக் கட்சியினர் 43 இடங்களைப் பெற்றனர்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களில் குடியரசுக் கட்சி 186 இடங்களில் வென்று முன்னிலை பெற்றது, ஜனநாயகக் கட்சி 160 இடங்களில் வென்ற்அது. பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை.
டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
47வது அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வென்ற, எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள். இருவரும் இணைந்து மற்றும் மக்களின் முன்னேற்றம், உலகளாவிய அமைதியை மேம்படுத்த பாடுபடுவோம். உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தியா, அமெரிக்கா இடையே உறவை வலுப்படுத்தப்படுத்த முயற்சிப்போம்.
https://twitter.com/narendramodi/status/1854075308472926675
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு: டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிக சிறந்த கம்பேக். இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான நட்புக்கு சக்திவாய்ந்த உறுதி கிடைத்திருக்கிறது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்: டொனால்டு டிரம்புக்கு வாழ்த்துகள். உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : டிரம்ப் தலைமையில் வலுவான அமெரிக்கா சகாப்தத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம். வலிமையின் மூலம் அமைதியான அணுகுமுறையை கையாளும் டிரம்பின் உறுதிபாடு பாராட்டத்தக்கது. கூட்டாண்மையைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர்: வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள டிரம்பிற்கு வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.
டிரம்ப் வெற்றி; பங்குச் சந்தைகள் உயர்வு!
அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் கிடுகிடுவென உயர்வை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தையிலும் அது எதிரொலித்தது. சென்செக்ஸ், நிப்டி ஆகியவை அதிரடியாக உயர்ந்தது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 270 புள்ளிகள் உயர்ந்து 24,484 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 901 புள்ளிகள் அதிகரித்து 80,378 புள்ளிகளாகவும் அதிகரித்துள்ளது.
அதேபோல, நிப்டி ஐ.டி., பங்கு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 1,614 பங்குகள் அதிகரித்து 42,039 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அதேபோல, டி.சி.எஸ்., எச்.சி.எல்., டெக், இன்போஸிஸ், டெக் மஹேந்திரா, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உச்சம் பெற்றுள்ளன.
முதலீட்டாளர்களுக்கு ₹8 லட்சம் கோடி லாபம்.
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்களுக்கு ₹ 8 லட்சம் கோடிவரை லாபம் கிடைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 901புள்ளிகள் உயர்ந்து 80,378ஆக நிறைவு, தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 270 புள்ளிகள் உயர்ந்து 24, 484ஆக வர்த்தகம் ஆனது.
கடவுள் என் உயிரைக் காப்பாற்றியதே இதற்குத்தான்! – டிரம்ப்
புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றிய டிரம்ப் பேசியதாவது:
குடியரசுக் கட்சி வெற்றிக்காக, வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப் போகிறது. இதுவரை யாரும் காணாத வகையில், ஓர் இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம்.
அமெரிக்கா மக்களுக்காக கடுமையாக உழைப்பேன். பிரச்னைகளை தீர்ப்பேன். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும். மக்கள் என்னை நம்பி தான் வாக்களித்துள்ளனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது.
அமெரிக்கா மக்கள் மகிழ்ச்சி மற்றும் பெருமைப்படும் வகையில் ஆட்சி நடத்துவேன். எண்ணில் அடங்காத தடைகளை கடந்து வெற்றி பெற்றுள்ளேன். அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.
எலான் மஸ்க்குக்கு நன்றி: டிரம்ப்
அதிபர் தேர்தல் மட்டுமல்ல செனட் மக்கள் சபையிலும் நமக்கே முன்னிலை கிடைத்துள்ளது. தேர்தல் வெற்றிக்கு முக்கியமான நபர் எலான் மஸ்க்; எனக்கு ஆதரவளித்த X தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்குக்கு நன்றி.
900க்கும் மேற்பட்ட பிரசாரங்கள் மேற்கொண்டு, அந்த பிரசாரங்களின் பலனாக வெற்றி சாத்தியமாகி உள்ளது. ஒளிமயமான எதிர்காலத்தை அமெரிக்க மக்களுக்கு உறுதி செய்யப் போகிறோம். உலகிலே மிக முக்கியமான பொறுப்பு அமெரிக்க அதிபர் பொறுப்பு. அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். மக்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.
துணை அதிபராக தேர்வாகும் ஜே.டி.வான்ஸ்க்கு வாழ்த்துகள். கடும் உழைப்பாளிகளான அமெரிக்கர்களுக்கு நன்றி, உங்கள் அன்பிற்கு காணிக்கையாக எங்கள் உழைப்பை தருவோம். அமெரிக்காவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சட்டப்பூர்வமாக வர வேண்டும். சீனா உள்ளிட்ட பிற நாடுகளிடம் நம்மிடம் உள்ள அளவிற்கு எண்ணெய் வளங்களோ, பிற வளங்களோ இல்லை.
கடவுள் ஏதோ ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார் என்று பலர் என்னிடம் கூறினர். நம் நாட்டைக் காப்பாற்றவும், அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றவும் தான் கடவுள் என்னைக் காப்பாற்றினார். நாம் அந்த கடமையை நிறைவேற்றியே தீருவோம்… என்று பேசினார் டிரம்ப்.
வெற்றியின் பின்னணியில் எலான் மஸ்க்!
பெரும் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வெளிப்படையாகவே டிரம்புக்கு ஆதரவை தெரிவித்தார். டிரம்ப் பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதி தர தயார் என்று எலான் மஸ்க் அறிவித்தார். தேர்தல் பிரசாரக்களத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி ரெடி என்று டிரம்பும் பதிலுக்குத் தெரிவித்தார். எலான் மஸ்கும் நான் தயார் என்று பதில் அறிவிப்பை வெளியிட்டார்.
வெளிப்படையான ஆதரவுடன், தினமும் தமது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை எலான் மஸ்க் வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அவரின் இந்நடவடிக்கை டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது!
தேர்தல் முடிவு வெளியான நாளில் கூட நிமிடத்துக்கு நிமிடம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவுகளை விடாமல் மாற்றிக் கொண்டே இருந்தார் எலான் மஸ்க். டிரம்ப் அதிபராகிறார் என்று முடிவுகள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் லைக் பொத்தானை இதய வடிவில் சிவப்பாக மாற்றி தமது சந்தோஷத்தை பகிர்ந்தார் மஸ்க்.
பிரசாரக் களத்தில் வெற்றிக்கு பல காரணிகள் இருந்தாலும் சூறாவளியாய் மக்களிடம் ஆதரவு திரட்டியது, இரு முறை நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, எலான் மஸ்கின் வெளிப்படையான ஆதரவு போன்றவை டிரம்பின் வெற்றிக்கு காரணிகளாகக் கருதப் படுகிறது.