டாக்கா:
வங்கதேச பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா, இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜியா தனது ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் கலிதா ஜியா. இதனிடையே இந்த வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தன்னை ஜாமீனில் விட வேண்டும் என்றும் முறையீடு செய்தார் ஜியா.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. உயர் நீதிமன்ற நீதிபதிகள் இனாயத்துர் ரஹ்மான், ஷாஹிதுல் கரீம் ஆகியோரைக் கொண்ட அமர்வில்இ ந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, கலிதா ஜியாவுக்கு 4 மாத இடைக்கால ஜாமின் அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
தற்போது கலிதா ஜாமின் பெற்ற நிலையில் ,கலிதா ஜியா ஆட்சியின் போது அவர் மீது போடப்பட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளுக்காக கோமில்லா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.