விமான நிலையத்தில், வழக்கமாக அனைவருக்கும் நடத்தப்படும் பாதுகாப்பு கெடுபிடி சோதனைகளை, பாகிஸ்தான் பிரதமருக்கும் நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது அமெரிக்கா.
பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று கோரி, அமெரிக்கா பல நெருக்குதல்களைக் கொடுத்தது. ஆனால், பாகிஸ்தான் அரசோ வழக்கம் போல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதைக் கண்டு கொதித்துப் போன அமெரிக்கா, பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு நெருக்குதல்களைக் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி தனிப்பட்ட பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார். அவரை விமான நிலையத்தில் அனைவரிடமும் நடத்தும் பாதுகாப்பு சோதனைகளைப் போல் நடத்தி அவமரியாதை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
அப்பாஸி அமெரிக்கா சென்றடைந்ததும், அதுகுறித்து செய்திகள் பாகிஸ்தானிய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. அவற்றில் ஒரு காட்சியில் அப்பாஸி தனது பை, கோட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நடந்து வருகிறார். அப்போது அவர் பாதுகாப்பு நடைமுறை சோதனைகளை முடித்துவிட்டு வெளியேறும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.
கடந்த வாரம் நியூயார்க்கில் உள்ள ஜே.எஃப்.கே. விமான நிலையத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட தனது சகோதரியை சந்திப்பதற்காக இந்தப் பயணத்தை அப்பாஸி மேற்கொண்டிருக்கிறார். இது அரசு முறைப் பயணம் இல்லை என்றாலும், பாகிஸ்தான் பிரதமர் என்ற நிலையில், அவரிடம் வழக்கமான நடமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியோ நியூஸ், அப்பாஸி தாமாகவே பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வந்ததாக செய்தியில் கூறியுள்ளது.
அப்பாஸி இது போல், பல முறை வெளிநாடுகளுக்கு தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். அண்மைய பிரிட்டன் பயணத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தனியாகவே அவர் பயணித்துள்ளார் என்று அவர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.