இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்போர்களையும், கண்காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின்போது அமைதி காக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையில் மே 29ம் தேதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது. கடந்த ஆண்டு மே 29ம் தேதி 60வது அமைதி காப்போர் தினம் கொண்டாடப்பட்டது.
அதேநேரம், 2001ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் மே 29ம் தேதியை ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைதி காப்போர் தினமாக பிரகடனப்படுத்தியது. 61 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தினத்திலே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை முதன் முதலாக மத்திய கிழக்கில் அமைதி காப்போர் நடவடிக்கையை (தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டினைக் கண்காணிக்கும் சபையை) உருவாக்கியது.
(UNTSO) 1948ம் ஆண்டு அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின் போது தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டின் ஏற்பாடுகளை மீறிய, இஸ்ரேலிய படைகள் பற்றி விசாரணையை மேற்கொண்டிருந்தபோது பிரான்சைச் சேர்ந்த யுத்தநிறுத்த கண்காணிப்பாளர் “ரென்னே லப்பாரியர்” (Rene Labarriere) என்பவர் முதன் முதலாக விபத்தில் உயிரிழந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது முதலாவது உயிரிழந்தவராக இவரே கருதப்படுகிறார். 1948ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி ஜெரூஸலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த “ஒலே எச் பேக்கே” சேர்ந்த (Ole H. Bakke) எனும் நோர்வே ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியாளர் கொல்லப்பட்டார்.
அதேபோல 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி காசா பகுதியில் சேவையாற்றிய லெப்டினன்ட் கர்ணல் ஜோசப் குவேறு (Joseph Queru) மற்றும் கப்டன் பியரே ஜின்னல் (Pierre Jeannel) என்ற பிரான்சிய அமைதி காக்கும் படை வீரர் உயிரிழந்ததோடு மற்றும் ஆறு படை வீரர்கள் காயமுற்றனர். மேலும், 1948ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி கவுண்ட் போர்க் பெர்னடொட் எனும் அமைதி காக்கும் வீரர், யுத்தத் தீவிரவாத இயக்கமான “STERN GANG” (ஸ்டர்ன் கேங்) எனும் கும்பலினால் கொலையுண்டார். இதேபோன்று 1958ம் ஆண்டு அரேபிய இஸ்ரேலியப் போர் 1973 அரேபிய இஸ்ரேலிய போர், 2008ம் ஆண்டு இஸ்ரேலிய லெபனன் போர் போன்றவற்றின் கடமையாற்றிய ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பாளர்கள் பலரும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோரும் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் அதிகமானோர் இஸ்ரேலியப் படைகளாலே கொல்லப்பட்டனர் என்பதுவும், ஐக்கிய நாடுகளின் தற்காலிப் போர் நிறுத்த உடன்பாட்டு ஏற்பாடுகளை மீறி செயற்பட்டவர்களும் இஸ்ரேலியர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இந்த அடிப்படையில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொல்லப்பட்டவர்கள் இத்தினத்தில் விஷேசமாக நினைவுகூறப்படுகின்றனர். உலக சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றாலும்கூட, இதன் நடவடிக்கைகள் அமெரிக்க சார்பாக அமைந்துள்ளமையினால் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கைகள் கேள்விக் குறியாகவே மாறி வருகின்றன. யுத்தத்தை உருவாக்கியோரே சமாதானத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என்று ஐ.நா. சமாதான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் ஜேன்மேரி கைகென்னோ கூறிய விடயம் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இது விடயமாக அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் மேலும் எமது சிந்தனையைத் தூண்டக்கூடியவையே.
அதாவது, சம்பந்தப்பட்ட தரப்பினரின் இதயசுத்தியுடனான அரசியல் விருப்பமே முரண்பாட்டுக்கு தீர்வைத் தேடித்தரும். ஐ.நா. சமாதானப் படையினர் அதனைத் தேடித் தருவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.. யுத்தத்தை ஏற்படுத்தியவர்களாலேயே சமாதானத்தை உருவாக்க முடியும். உங்களால் அவர்களுக்கு உதவ முடியும். யுத்தத்தில் களைப்படைந்த தருணத்தில் உங்களால் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதாவது, நல்ல நோக்கத்துக்கான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியும். இதுவே ஐ.நா. சமாதானப் படை மேற்கொள்ள வேண்டிய பணியாகும். ஐ.நாவால் பலவந்தமாக சமாதானத்தை உருவாக்க முடியாது. இங்கு ஜேன்மேரியின் கருத்து யதார்த்தபூர்வமானவை. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, ஈராக் மீது நடத்திய போர் சட்ட விரோதமானது என கனடாவைச் சேர்ந்த 31 சர்வதேச சட்டப் பேராசிரியர்கள் தெரிவித்திருந்தனர். 15 சட்டக் கல்லூரிகளைச் சார்ந்த இந்த பேராசிரியர்கள் அமெரிக்க தாக்குதல், ”சர்வதேச சட்டத்தை அடிப்படையிலேயே மீறுகின்ற செயலாக அமைந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு, பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச சட்ட நடைமுறைகளின் கட்டுக்கோப்பை கடுமையாக பாதிக்கின்ற வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. ஐ.நா. சாசனத்தின் 41 மற்றும் 42வது பிரிவுகள் போர் கடைசி ஆயுதம்தான் என்பதை தெளிவுபடுத்துகின்றன. உடனடி அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே சர்வதேச சட்டப்படி திடீர் தாக்குதல் நடத்துவதற்கு பாரம்பரியமாக அனுமதி உண்டு. ஈராக் இத்தகைய அச்சுறுத்தலாக இல்லை எனவும் குறிப்பாக ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் அந்நாட்டில் (ஈராக்கில்) பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என சட்ட அறிஞர்கள் இதைப்பற்றி கருத்து தெரிவித்திருந்தனர்.
இப்படிப்பட்ட நிலையில் யுத்தம் முடிந்த பின்பு அதே பிரதேசத்தில் அமைதிப்படை செயல்படுவதென்பது பல்வேறுபட்ட விமர்சனங்களுக்குட்பட்டதே. இவ்வாறாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் மத்தியிலே கடந்த சில தசாப்தங்களாக ஐ.நாவின் அமைதிப் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.