எத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஏராளமானோர் உயிரிழந்திருக்கக்கூடிய அபாயம்

எத்தியோப்பியா பிரதமருக்கு ஆதரவாக மக்கள் நடத்திய பேரணியின் மீது இன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இவரது ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் அடிஸ் அபாபாவில் இன்று பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர். பேரணி முடிவில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் அபிய் அஹமத், விடைபெற்று செல்ல ஆதரவாளர்களை நோக்கி கையை அசைத்தார். மக்களும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவரை வழியனுப்புவதற்காக கைகளை அசைத்து விடையளித்தனர்.  அப்போது, மக்கள் கூட்டத்துக்கிடையில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது.

இதனால் பதற்றமடைந்த மக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் காயங்களின்றி உயிர் தப்பிய பிரதமர் பின்னர் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று குறிப்பிட்ட அவர், இதில் சிலர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, போலீஸ் வாகனத்தின் மீது சில மர்ம நபர்கள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சிலர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் சிலர் உயரிழந்திருக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.