அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இன்று சீனா பயணம்

அமெரிக்கா சீனா இடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ் இன்று சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

சீனாவின் கொள்கைகள், தென் சீனக்கடல் விவகாரம், தைவானுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வது ஆகிய விவகாரங்களால் சீனா- அமெரிக்கா இடையே மோதல்கள் இருந்து வருகிறது. இதற்கிடையில், இருநாடுகளும் இறக்குதி பொருட்களுக்கு வரியை அதிகரித்ததால் மறைமுக வர்த்தக போரும் நிலவி வருகின்றது.

சீனா அமெரிக்கா இடையிலாயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மாட்டீஸ், இந்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்கள் சீனாவில் இருக்கும் ஜேம்ஸ் மாட்டீஸ் சீனா பாதுகாப்புத்துறையின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச இருக்கிறார்.

சீன பயணத்தை முடித்துக்கொண்டு தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஜேம்ஸ் மேட்டீஸ் பயணம் மேற்கொள்கிறார். தென்கொரிய பயணத்தின்போது, தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் சாங் யோங் மூ -வை சந்தித்து பேசவுள்ளார். இதன்பிறகு, ஜப்பான் செல்லும் ஜேம்ஸ் மேட்டீஸ், அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் சுனோரி ஒனோடராவை சந்தித்து பேசுகிறார்.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை உயர் பொறுப்புக்கு வந்த பிறகு, ஜேம்ஸ் மாட்டீஸ் சீனா செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.