சவூதி விமான நிலையங்களில் அட்டை பெட்டிகளுக்கு தடையா?

சவூதி விமான நிலையங்களில் விமானத்தில் அட்டை பெட்டிகள் ஏற்றி செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளதாக சமீபத்தில் வதந்தி ஒன்று பரவி வருகிறது.

பொதுவாக அட்டை பெட்டிகளோ அல்லது சாதாரண பெட்டிகளோ பயணிகள் கொண்டு செல்லும் போது அதனை முறையாக பேக் செய்து பாலித்தீன் கவர் இட்டு தண்ணீர் புகா வண்ணம் பேக் செய்யப் பட்டிருக்க வேண்டும் இது பல வருடங்களாக சவூதி மட்டுமல்லாமல் பெரும்பாலான நாடுகளின் விமான நிலையங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால் அட்டை பெட்டிகள் வளைகுடா மக்கள் அதிகம் பயன் படுத்துவதால் சவூதி உள்ளிட்ட நாடுகளில் இந்த விதிமுறை கடுமையாக பின்பற்றப் படுகின்றன.

மேலும் ஒரு பெட்டியின் அளவு 20 முதல் 24 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு மிகுதியாக இருந்தால் அதிகாரிகள் அந்த பெட்டிகளை அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல பாலித்தீன் கவர் இடாமல் உள்ள பெட்டிகள், கயிறு கட்டிய பெட்டிகள் மற்றும் சட்டத்திற்கு மாறான பொருட்கள், தீ பிடிக்கும் வகையில் உள்ள பொருட்கள் என பல வகைகளில் பயணிகளின் பெட்டிகள் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப் படுகின்றன. மேலும் மூட்டை போன்று கட்டப் படும் பெட்டிகளும் சில அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படும்.

ஆனால் சிலர் இதனை தவறாக பின்பற்றிவிட்டு அட்டைப் பெட்டிகளுக்கு அனுமதி இல்லை என்பது போன்ற வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். மேலும் விமான நிறுவனங்கள் அட்டை பெட்டிகள் அனுமதி மறுப்பு குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.