தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் தற்போது லண்டனில் இருந்து வருகிறார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் சமீபத்தில் அவரின் ரூ.393 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏலம் விட லண்டன் கோர்ட் அனுமதி அளித்தது. மல்லையா வழக்கில் இறுதி வாதங்கள் வரும் ஜூலை 31 உடன் நிறைவடைகிறது.
இதனால் அவர் மீதான வழக்குகளில் செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லண்டனில் பேட்டி அளித்துள்ள மல்லையா, “தனது சொத்துக்கள் குறித்த பிரமாண பத்திரத்தை லண்டன் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளேன் என்றும், தன் பெயரில் உள்ள சொத்துக்கள், வீடுகளை பறிமுதல் செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் லண்டனில் எனது குழந்தைகள் மற்றும் தாய் பெயரில் இருக்கும் சொத்துக்களை எவ்வாறு இவர்கள் பறிமுதல் செய்ய முடியும்.
தான் எப்போதும் இங்கிலாந்து பிரஜை தான் என்றும் இந்திய குடிமகன் அல்ல. அதனால் எதற்காக நான் இந்தியா வர வேண்டும்? நான் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுவது எப்படி சரியாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. இது இந்தியாவில் தேர்தல் நடக்கும் ஆண்டு. அதனால் அதிக ஓட்டுக்களை பெறுவதற்காக என்னை இந்தியா அழைத்து சென்று, சிலுவையில் ஏற்றி, தூக்கில் போட விரும்புகிறார்கள் என நினைக்கிறேன் என்றார்.