மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தில் 17 பேர் கைது

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டார்கள் எனும் சந்தேகத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தேசிய காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார். கோலாலம்பூரில் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்த இவர்களில் இருவர் அண்மையில்தான் சிரியாவில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து திரும்பியிருந்தனர் என தேசிய காவல் துறைத் தலைவர் காலித் அபு பக்கர் தெரிவித்துள்ளார். காவல் நிலையங்கள், ராணுவப் பாசறைகள் ஆகியவை அவர்களது திட்டமிட்ட இலக்குகளாக இருந்தன என்று மலேசிய உள்துறை அமைச்சர் அஹ்மத் ஜாகித் ஹமீது தெரிவித்துள்ளார். மலேசியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்ட வழிமுறைகள் குறித்த தீர்மானங்களை மலேசிய அரசு கடந்த வாரம் முன்வைத்தது. அதன் அடிப்படையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப் படுபவகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் காலவரம்பற்ற காவலில் வைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு கொண்டுவந்துள்ள இந்தத் தீர்மானம், அடக்குமுறை உள்நோக்கம் கொண்டது என்று மனித உரிமை அமைப்புகளும், எதிர்கட்சிகளுக்கும் குறை கூறியுள்ளன.