பமாகோவில் ஓட்டலில் ஜிகாதிகள் துப்பாக்கி சூடு: 175 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தனர்

பமாகோ,

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஓட்டலில் ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். ஜிகாதிகள் பொதுமக்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாரீஸ் தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து சர்வதேச நாடுகள் வெளியேறுவதற்கு முன்னதாக, மாலிநாட்டு தலைநகர் பமாகோவில் உள்ள ஓட்டலில் ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர் என்று பாதுகாப்பு வட்டார மற்றும் செய்தியாளர்கள் தரப்பு செய்திகள் வெளியாகிஉள்ளது. தீவிரவாதிகள் ஓட்டலில் 175 விருந்தினர்கள் மற்றும் பணியாளர்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜிகாதிகள் தானியங்கி துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்திய சத்தம் வெளியே கேட்கப்பட்டு உள்ளது. ஓட்டலின் 190 எண் கொண்ட அறையின் வெளியே முதலில் தாக்குதல் நடத்தப்பட்ட சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது.

ஜிகாதிகள் துப்பாக்கி சூடு நடத்துவதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து உள்ளனர். அவர்களும் ஓட்டலை சுற்றி வளைத்து உள்ளனர். ஜிகாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகிஉள்ளது. “துப்பாக்கி சூடு சத்தம் ஓட்டலின் 7-வது மாடியில் கேட்கிறது, ஜிகாதிகள் 7-வது மாடியில் நடைபாதையில் துப்பாக்கி சூடு நடத்திஉள்ளனர்” என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க தூதரகம் தன்நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்க கேட்டுக் கொண்டு உள்ளது. ஓட்டலில் அமெரிக்கர்களும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடக்கு மாலியானது ஜிகாதிகள் பிடியில் உள்ளது. இந்த ஜிகாதி பிரிவுகள் அல்-கொய்தா தீவிரவாத இயத்துடன் தொடர்பு உடையவை. இங்கு பிரான்ஸ் தலைமையிலான ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாலியில் இப்போது பிரான்ஸ் படையை சேர்ந்த 1000 வீரர்கள் சண்டையிட்டு வருகின்றனர். பமாகோவில் கடந்த மார்ச் மாதம் இதேபோன்று பிரபலமான ஓட்டல் ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இதற்கு அனைத்து தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.