இலங்கையில் பிரதமராகப் பொறுப்பேற்று பெரும்பான்மையை நிரூபிக்க போராடி வரும் ராஜபக்சே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை நாடியுள்ளார். இலங்கையின் திடீர் பிரதமராக ராஜபக்சேவை அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா நியமித்ததை அடுத்து, அந்நாட்டில் அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தை கூட்ட ரணில் விக்கிரமசிங்கே தரப்பு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தனக்கான ஆதரவை பெருக்கும் நடவடிக்கையில் ராஜபக்சே தரப்பு ஈடுபட்டுள்ளது. 225 எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு 95 பேர் ஆதரவு மட்டுமே இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க அவரது ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.
ரணில், ராஜபக்சே ஆகிய இரு தரப்பினரும் மாறி மாறி எம்பிக்களை தங்கள் பக்கம் இழுப்பதில் பணத்தை வாரியிறைப்பதாக கூறப்படுகிறது. ராஜபக்சே தனது ஆட்சியை உறுதி செய்துக் கொள்வதற்காக சீனா பணத்தை இறைப்பதாக ரணில் விக்ரம்சிங்கேயிடம் இணை அமைச்சராக இருந்த ரஞ்சன் ராமனநாயகே குற்றம் சாட்டியுள்ளார். சீனா நாட்டை ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்கி விட முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.