சிங்கப்பூரைக் கலக்கிய மோடி! இந்திய வம்சாவளியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு! உலக மாநாட்டின் மையப் புள்ளி!

ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் சென்றார் மோடி. உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேருக்கு வங்கி சேவையை வழங்கும் அபிக்ஸ் திட்டத்தை இன்று சிங்கப்பூரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று இரவு தில்லியில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இன்று அதிகாலை சிங்கப்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியினரின் வரவேற்பில் திக்குமுக்காடிய பிரதமர் மோடி, இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட போது, மழையையும் பொருட்படுத்தாமல், இவ்வளவு அதிகாலையிலேயே என்னை வரவேற்க இத்தனை பேர் குவிந்திருப்பது மிகவும் பெருமைப் பட வைக்கிறது என்று குறிப்பிட்டு, அந்தப் படங்களை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூரில் நிதித் தொழில்நுட்பம் வழங்கும் நிறுவனங்களின் 30 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்ற Fintech Festival கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இந்தக் கூட்டத்தில் தாம் பேசியவற்றின் தொகுப்பையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் மோடி.

அவர் தனது பேச்சில், இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஃபின்டெக் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, திறமையானவர்கள் கூடியுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமை அடைவதாகக் கூறினார். உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது என்றும், டிஜிட்டல் நிதித்துறையில் சிங்கப்பூர் ஒரு பெரும் வீச்சினை நிகழ்த்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது என்றும், இதனால் 130 கோடி மக்களின் வாழ்க்கையையே இது மாற்றி உள்ளதாகவும் கூறினார் மோடி.

உலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி வருகிறது. தொழில்நுட்பம், புதிய உலகின் போட்டியாகவும் ஆற்றலாகவும் உள்ளது. இது எண்ணற்ற வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறது. 2014ஆம் ஆண்டில் எனது தலைமையிலான ஆட்சி வந்த பின்னர், ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும், ஒவ்வொரு புறநகர் கிராமங்களின் தோற்றமும் வளர்ச்சித் திட்டங்களால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட மோடி, சில ஆண்டுகளிலேயே 120 கோடி இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றும்,
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

தற்போது இந்தியாவில் 128 வங்கிகள் யூபிஐ மூலம் இணைக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணபரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்துள்ளது; ஒவ்வொரு மாதமும் பணபரிவர்த்தனை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது என்றும் கூறினார்.

மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது என்றும், மனித உள்கட்டமைப்பு அதிகமுடைய நாடு இந்தியா, அது விரைவில் உலகின் தொடக்க மையமாக மாறும் என்றும் பெருமிதத்துடன் கூறினார்.

120 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு அளிக்கும் மத்திய அரசின் நோக்கம் நிறைவேறி உள்ளதாகவும், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் துவங்குவற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்றும் தனது உரையில் அழுத்தமாகக் கூறினார் பிரதமர் மோடி.

தொடர்ந்து, ஃபின்டெக் கூட்டத்தில் அபிக்ஸ் எனும் திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார். உலகம் முழுவதும் வங்கிக் கணக்கு இல்லாத சுமார் 200 கோடி மக்களுக்கு வங்கி சேவையை இத்திட்டம் வழங்கும். ஹைதராபாத், கொழும்பு, லண்டன் உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்படும் பின்டெக் தொழில்நுட்ப வசதியால் 23 நாடுகளில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிசேவையை வழங்கும் இத்திட்டத்தை மோடி தொடங்கி வைத்தார்.

இந்த இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தில் கிழக்காசிய உச்சி மாநாடு ஆசியான் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.